இன்று இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியுடன் இங்கிலாந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் மிக நம்பிக்கை உடன் வந்து முதல் இன்னிங்ஸில் மோசமாக சுருண்டு இருக்கிறது.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி பந்து வீசும் என அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 34 ரன்கள் ஏதும் இழப்பில்லாமல் ஆரம்பித்தது. எனவே வழக்கம்போல் இங்கிலாந்துக்கு இந்த முறையும் வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அங்கிருந்து மேற்கொண்டு 87 ரன்கள் மட்டுமே எடுத்து 121 ரன்களுக்கு 41.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் கொடுத்து வெஸ்ட் இண்டீஸ் பரிதாபமாக ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அறிமுக வீரர் மைக் லூயிஸ் 24 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து கவிம் ஹாட்ச் 24, அலிக் ஆதனஸ் 23 ரன்கள் எடுத்தார்கள்.
இங்கிலாந்து அணியின் தரப்பில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் 12 ஓவர்கள் பந்து வீசி, 5 மெய்டன்கள் செய்து, 45 ரன்கள் விட்டுத்தந்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு சிறப்பான வழி அனுப்புதலை செய்வதற்கான வேலையை கச்சிதமாக முடித்தார்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 3, ஒல்லி போப் 57, ஜாக் கிரவுலி 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். தற்போது முதல் நாள் முடிவில் களத்தில் ஜோ ரூட் 15, ஹாரி புரூக் 25 ரன்கள் எடுத்து நிற்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : 142 ரன்.. டிஎன்பிஎல்-ல் தடுமாறும் நடராஜன்.. பேட்டிங்கில் கைவிட்ட விஜய் சங்கர்.. சேப்பாக் அணியிடம் திருப்பூர் தோல்வி
இந்தப் போட்டிக்கு முன்பாக ஜேம்ஸ் ஆண்டர்சனை சிறப்பான முறையில் வழி அனுப்பி வைக்க விடமாட்டோம், நிச்சயம் நான் அந்த பார்ட்டியை கெடுப்பேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்துவீச்சு நட்சத்திரம் ஷாமர் ஜோசப் சவாலாக பேசி இருந்தார். ஆனால் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் பெரிய பதிலடி கொடுத்திருக்கிறது. தொடர்ந்து ஏதாவது மேஜிக் நடக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.