இந்திய கிரிக்கெட்டின் அனுபவ வீரர் அஜிங்க்ய ரஹானே, 38 வயதில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான வீடியோவில் தனது முடிவை அறிவித்த ரஹானே, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற சிறுவயது கனவில் தொடங்கிய தனது நீண்ட பயணத்தையும் நினைவுகூர்ந்தார்.
தனது ஓய்வு முடிவுக்கான காரணத்தையும் ரஹானே அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் இருப்பதாக கூறிய அவர், பேட்டிங்கில் ‘டைமிங்’ எவ்வளவு முக்கியமோ அதேபோல் வாழ்க்கையிலும் சரியான நேரத்தை புரிந்துகொள்வது முக்கியம் என்றார். தற்போது கிரிக்கெட்டிலிருந்து விலகுவதற்கான சரியான நேரம் வந்துவிட்டதாக உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே கனவு
சிறுவயதில் டோம்பிவிலியில் இருந்து மும்பைக்கு பயிற்சிக்காக சென்ற நாட்களையும் ரஹானே நினைவுகூர்ந்தார். கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இந்திய அணியின் தொப்பியை அணிய வேண்டும் என்பதே தனது கனவாக இருந்ததாக கூறிய அவர், நாட்டையும் அணியையும் எப்போதும் தனக்கு முன்னால் வைத்ததாக உருக்கமாக தெரிவித்தார். இந்தியாவுக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் 5,077 ரன்கள் எடுத்த அவர், 12 சதங்கள் மற்றும் 26 அரைசதங்களை பதிவு செய்துள்ளார்; மேலும் 90 ஒருநாள் மற்றும் 20 டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2020-21 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் எப்போதும் தனி இடம் பிடிக்கும். அடிலெய்டில் இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர், மெல்போர்னில் சதம் அடித்து அணியை மீட்டதுடன், பல முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் கிடைத்த அந்த வெற்றி, ரஹானேவின் கேப்டன்சி வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
ஐபிஎல் தொடரிலும் 212 போட்டிகளில் விளையாடிய ரஹானே, மும்பை, ராஜஸ்தான், புனே, டெல்லி, சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக களமிறங்கியுள்ளார். வீரராக தனது பயணம் முடிந்தாலும் கிரிக்கெட்டுடனான உறவு முடியவில்லை என்று கூறிய அவர், அடுத்த தலைமுறை வீரர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்து இந்த விளையாட்டுக்கு திருப்பிக் கொடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீண்ட அவரது கிரிக்கெட் பயணம் இத்துடன் முடிவுக்கு வந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவை வழிநடத்திய அந்த வரலாற்று வெற்றி ரஹானேவின் பெயரை தொடர்ந்து நினைவுபடுத்தும்.






