“வெஸ்ட் இண்டீஸ் பிளேயர்ஸ் வேணும்னே அடிக்கமாட்டேங்கிறாங்க” – இந்தியா பௌலிங் கோச் குற்றச்சாட்டு!

0
1197

வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி முதற்கட்டமாக இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது இந்தியா.

இந்நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 229 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அபாரமான சதத்தால் 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இதனைத் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் மெதுவான ஆட்டத்தையே கடைப்பிடித்து வந்தது . இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்த அந்த அணி நேற்றைய நாள் முழுவதுமாக ஆடி 229 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

ஆட்டத்தின் சிறிது நேரம் மழையினால் தடை பட்டாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்யும் நோக்கிலேயே மிகவும் மெதுவாக ஆடியது. இந்நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான பரஸ் ம்ஹம்ப்ரெய் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கை விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து பேசி இருக்கும் அவர் ” இந்த ஆடுகளம் மிகவும் மெதுவாக இருக்கிறது. பேட்டிங்கிற்கு மிகவும் எளிமையான ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வேண்டுமென்றே மெதுவாக விளையாடுகிறார்கள் . ரன் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதற்கு அவர்கள் முயற்சி கூட எடுப்பதில்லை . மிகுந்த தற்காப்பு எண்ணத்துடன் அவர்கள் விளையாடுகின்றனர் . இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஆடுகளங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிற்கும் சமவாய்ப்பு உள்ளதாக இருக்க வேண்டும் . முதல் டெஸ்ட் போட்டியில் பந்து நன்றாக திரும்பியது. ஆனால் இந்த போட்டி நடைபெறும் ஆடுகளத்தில் 20 விக்கெட்டுகளை எடுப்பது என்பது அசாத்தியமாகவே தோன்றுகிறது” என்று தெரிவித்தார்,

மேலும் இந்தியாவின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் செய்த பின்பு ஆடுகளத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்று பார்த்து அதற்கு ஏற்றார் போல் எங்களுடைய திட்டங்களை அமைப்போம். வெற்றியை நோக்கி முன்னேறுவதே எங்கள் இலக்கு” என்று தெரிவித்திருக்கிறார்.