அவருக்கு வாய்ப்பு தராம தப்பு பண்ணிட்டேன்.. தெ.ஆ கூட சண்டைக்கு தயாரா இருக்கோம் – ரோமன் பவல் பேட்டி

0
841
Powell

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்க அணிக்கு எதிராக முக்கிய போட்டியில் விளையாடியது. முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராகத் தோல்வியடைந்த காரணத்தினால் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மேலும் நல்ல ரன் ரேட்டும் தேவைப்பட்டது. இப்படியான நெருக்கடியில் அமெரிக்க அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் நல்ல ரன் ரேட்டில் வீழ்த்தி இருக்கிறது. வெற்றிக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் பவல் பேசியிருக்கிறார்.

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அமெரிக்க அணிக்கு ஆண்ட்ரீஸ் கவுஸ் மட்டுமே 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மற்றபடி அந்த அணியில் இருந்து யாரும் பெரிய ரன் பங்களிப்பு செய்யவில்லை.

- Advertisement -

அமெரிக்க அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய ரோஸ்டன் சேஸ் மற்றும் ரசல் இருவரும் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள். இந்த இலக்கை சீக்கிரத்தில் துரத்த வேண்டிய நெருக்கடியில் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் அதிரடியில் மிரட்டி 39 பந்தில் 84* ரன்கள், நிக்கோலஸ் பூரன் 12 பந்தில் 27* ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் 10.5 ஓவரில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் இரண்டு போட்டியில் ஒரு வெற்றி பெற்று இருந்தாலும், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தைவிட ரன் ரேட்டில் மேலே இருப்பது அந்த அணிக்கு சாதகமாக இருக்கிறது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் பவல் “இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கின்னிங்டன் மைதானம் சில நல்ல முக்கிய நினைவுகளை ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. இன்று எங்களுக்கு நல்ல கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ரோஸ்டன் சேஸ் அவருடைய ரோலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பந்துவீச்சை மிகவும் இறுக்கமாக வைத்திருந்தார். பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் இது நல்ல செயல்பாடு.

இதையும் படிங்க: 10 ஓவரில் வெ.இ ருத்ர தாண்டவம்.. ஷாய் ஹோப் காட்டடி.. பூரன் உலக சாதனை.. அமெரிக்கா வெளியேறியது

ஷாய் ஹோப் அற்புதமானவர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு விளையாடிய அவருக்கு, டீம் காம்பினேஷன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக நான் வாய்ப்பு தரவில்லை. ஆனால் வாய்ப்புக்காகக் காத்திருந்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசிப் போட்டி மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். நாங்கள் சண்டைக்கு தயாராக இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவாக மைதானம் நிரம்பிய ரசிகர்கள் இருக்கிறார்கள். நாங்கள் கேட்பது இவ்வளவுதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -