வெஸ்ட் இண்டீஸ் 374 ரன்கள், பதிலுக்கு 374 ரன்கள் அடித்த நெதர்லாந்து! – சூப்பர் ஓவரில் ஒரே வீரர் பேட்டிங்கில் 30 ரன்கள் அடித்து, பவுலிங்கிலும் 2 விக்கெட்! – உலகக்கோப்பை குவாலிபயரில் நிகழ்ந்த அதிசயம்

0
2966

உலகக் கோப்பை குவாலிபயர் லீக் போட்டியில் முக்கிய பிரிவில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு அணிகளும் இன்று மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

துவக்க வீரர் பிரண்டன் கிங்(76) மற்றும் சார்லஸ்(54) இருவரும் முதல் விக்கெட்டிற்கு 101 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதமடித்து அவுட்டாகினர். சாய் ஹாப் 47 ரன்கள் அடித்து அவுட்டானார்.

- Advertisement -

நிக்கோலஸ் பூரான் மற்றும் கீமோ பால் இருவரும் 7ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் சேர்த்தனர். நிக்கோலஸ் பூரான் 104 ரன்கள் அடித்தார். கீமோ பால் 46 ரன்கள் அடித்தார். 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இமாலய இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு துவக்க வீரர்கள் விக்ரமசித் சிங்(37) மற்றும் மேக்ஸ்(36) இருவரும் ஜோடி சேர்ந்து 76 ரன்கள் அடித்தனர். லீடே 33 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

170 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது ஜோடி சேர்ந்த தேஜா மற்றும் எட்வார்ட்ஸ் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டு ஐந்தாவது விக்கெட்டிற்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

- Advertisement -

எட்வார்ட்ஸ் 67 ரன்களுக்கு அவுட் ஆகினார். தேஜா 111 ரன்கள் குவித்து வெளியேறினார். இருவரும் ஆட்டம் இழக்க, பின்னர் வந்தவர்கள் ஆங்காங்கே சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்தனர். ஆட்டம் சூப்பர் ஓவருக்கு மாறியது.

சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அணிக்கு லோகன் வேன் வீக் என்பவர் பேட்டிங் செய்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் பௌலிங் செய்தார். இதில் 3 சிக்சர்கள் மூன்று பவுண்டரிகள் உட்பட ஆறு பந்துகளில் 30 ரன்கள் அடித்து மிரட்டினார்.

இதனையடுத்து அவரே நெதர்லாந்து அணிக்கு பவுலிங்கும் செய்தார். முதல் மூன்று பந்துகளில் எட்டு ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தாலும் நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தி நெதர்லாந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த வெற்றியுடன் நெதர்லாந்து அணி சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது. மேலும் இரண்டு புள்ளிகளையும் உறுதி செய்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து வரும் லீக் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற முடியும். மேலும் எந்த புள்ளிகளும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைக்காது.