“நான் அழுத்தத்தில் நல்லா விளையாட காரணம் இவங்கதான்.. ஆனா இன்னொரு விஷயமும் இருக்கு!” – இஷான் கிஷான் முதல்முறையாக வெளிப்படையான பேச்சு!

0
417
Ishan

இந்திய அணி கடைசியாக ஒரு உலகக் கோப்பையை வென்றது 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையைதான்!

இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பொழுது, தற்போதைய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக இடம் பெற்று, மிடில் வரிசையில் பேட்டிங் செய்து வரும் இஷான் கிசானுக்கு 13 வயது!

- Advertisement -

கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இரண்டு மிகப்பெரிய கனவுகள் இருக்கும். ஒன்று தமது அணிக்காக வெள்ளை நிற உடையில் சிவப்புப் பந்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது.

மற்றொன்று தங்கள் அணிக்காக உலகக் கோப்பை அணியில் இடம் பிடிப்பதோடு, விளையாடும் அணியிலும் இடம் பெற்று விளையாடி உலக கோப்பையை தங்கள் நாட்டுக்காக வெல்வது. இது இரண்டும் நடக்காத வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முழுமை அடையாத ஒன்றுதான்!

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் இளம் வீரர் இசான் கிசானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. தற்பொழுது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியிலும் இடம் கிடைத்திருக்கிறது. இனி அவருக்கு எஞ்சி இருப்பது ஒரு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே!

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது
“ஒரு தனிநபராக, ஒரு விளையாட்டு வீரராக, எல்லோருமே தங்கள் நாட்டுக்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் எங்கள் வாழ்க்கையில் அது மிகவும் முக்கியமான கட்டம். எல்லா இடங்களிலும் ஆபத்து உள்ளது. தைரியமாக சென்று நமது விளையாட்டை நாம் விளையாட வேண்டும்.

விளையாட்டில் அழுத்தம் இருக்கிறது கூடவே எதிர்பார்ப்பும் இருக்கிறது. எனவே நீங்கள் கூடுதலாக சிறப்பாக செயல்பட வேண்டும். அதனால் நான் அதைச் செய்ய விரும்புகிறேன். இந்த உலகக் கோப்பையை வெல்வது பற்றி நான் நிறைய யோசித்து இருக்கிறேன்.

நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பொழுது எனது ஆட்டம் நிறைய மாறியது. ஒரு நபராகவும் நிறைய மாறினேன். அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்பட வேண்டிய விஷயங்களை நான் வித்தியாசமான முறையில் பார்க்க ஆரம்பித்தேன்.

அழுத்தமான சூழ்நிலையில் நான் சிறப்பாக செயல்பட விரும்பினேன். இதற்கு எனக்கு மும்பை இந்தியன்ஸ் அணி உதவியது. எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற பல இளைஞர்களுக்கு உதவி இருக்கிறது. மேலும் நான் விளையாடுவதால்தான் என் சகோதரர் விளையாட முடியாமல் போனது. எனவே நான் சிறப்பாக விளையாடுவதற்கு என் மீது நானே அழுத்தம் கொடுத்துக் கொள்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!