இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்து முடிந்திருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தொடர் நாயகனாக இந்திய அணியின் மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்படுவதற்கு முன்பாக இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
ஆனால் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இவரை வாங்கிய பிறகு, சரியான முறையில் செலுத்தி ஐபிஎல் தொடரில் பயன்படுத்திக் கொண்டதோடு, அதன் மூலமாக இந்திய தேசிய அணிக்கும் அனுப்பி இருக்கிறது.
இந்த முறை ஹர்திக் பாண்டியா காயம் அடைந்திருந்த காரணத்தினால் வாய்ப்பு பெற்ற சிவம் துபே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி, மேலும் ஆட்டம் இழக்காமல் இரண்டு அரை சதங்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்திருந்தார்.
அவருடைய இந்த ஆல்ரவுண்ட் செயல்பாட்டுக்காக இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான விருதாக பதிவாகி இருக்கிறது. மேலும் இங்கிருந்து தான் அவருடைய இந்திய அணிக்கான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அழுத்தமாக ஆரம்பிக்கவும் செய்கிறது.
தொடர் நாயகன் விருது பெற்ற சிவம் துபே பேசும்பொழுது ” மூன்று ஆட்டங்களில் இரண்டு விக்கெட்டுகள் மற்றும் 124 ரன்கள். ஒரு ஆல் ரவுண்டராக நீங்கள் எப்பொழுதுமே தொடரின் நாயகனாக இருக்க விருப்பப்படுவீர்கள். இது எனது வாழ்க்கையில் நான் சாதித்த மிகப் பெரிய ஒன்று. இந்த உணர்வு மிகவும் நன்றாக இருக்கிறது.
இந்த மைதானத்தில் நாங்கள் நிறைய ரன்கள் எடுத்தோம். சூப்பர் ஓவருக்கு முன்பாகவே நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம். ஆனால் இது கிரிக்கெட், இரு அணிகளுமே நன்றாக செயல்பட்டது. எனது பந்துவீச்சில் நான் மேம்படுத்த நிறைய விஷயங்கள் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இத்துடன் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கான சர்வதேச டி20 போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது. இனி இந்திய வீரர்களுக்கு டி20 கிரிக்கெட் பயிற்சியாக ஐபிஎல் தொடர் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.