நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் நம்பிக்கை உள்ளது – இலங்கை கேப்டன் கருணரத்னே

0
141
Dimuth Karunaratne

நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நிச்சயம் விளையாடுவோம் என்று இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே நம்பிக்கை அளிக்கும் விதமாக பேட்டி அளித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, டெஸ்ட் போட்டிகளின் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் எனும் புதிய தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. துரதிஷ்டவசமாக, இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று தவறவிட்டது. இந்நிலையில், இம்முறை நடைபெற்று வரும் இந்த தொடரில் நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகள் விளையாடிய ஐந்தாவது டெஸ்ட் போட்டி பிறகு, வெளியிடப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 52% வெற்றிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் முறையே இருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பெற்ற பிறகு, புள்ளி பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை அணி, தற்போது 54% வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இது குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே கூறுகையில், “பலம்மிக்க ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி. வருகிற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றோம் என்றால் நிச்சயம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறுவோம்.” என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக, இலங்கை அணி வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒரு போட்டியை இலங்கை அணி வென்றது. மற்றொரு போட்டி டிராவில் முடிவடைந்தது. அதற்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்திருந்த இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு நட்சத்திர ஆல் ரவுண்டராக இருந்து வரும் தனஞ்சேயா டி சில்வா காயம் காரணமாக வெளியில் இருந்தார். அவர் தற்போது குணமடைந்திருப்பதால், விரைவில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியில் இணைவார் என்று கேப்டன் கருணரத்னே தெரிவித்திருந்தார்.

டி சில்வா இடத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர் கமிந்து மெண்டில் அணியில் இடம் பெற்று, அரை சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சந்திமால், இரட்டை சதம் அடித்து அணியில் வெற்றிக்கு வித்திட்டார். ஆகையால், அடுத்த தொடரில் ஐந்தாவது இடத்தை யார் பூர்த்தி செய்வார் என்பது குறித்து அணியின் கேப்டன் கருணரத்னே மிகவும் குழப்பத்தில் இருக்கிறார். இது பற்றியும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

“பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பலம் பொருந்திய அணியாக காணப்படும் அவர்களை வீழ்த்திவிட்டால், வீரர்களுக்கு மத்தியில் புது உத்வேகம் கிடைக்கும். பாகிஸ்தான் பேட்ஸ்மெண்ட்கள் சுழல் பந்துவீச்சை நேர்த்தியாக விளையாடக் கூடியவர்கள். அது எங்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலாக இருக்கும். ஆனாலும் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் அணியில் இருக்கிறார்கள். மிகப்பெரிய அளவில் திட்டங்கள் தீட்டாமல், அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தி அதனை சரியாக செய்து பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.” என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக கூறினார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இரு அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற ஜூலை 16ஆம் தேதி துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.