எங்ககிட்ட ஹர்திக் பாண்டியா மாதிரி பிளேயர் இல்லை; பாகிஸ்தான் ஜாம்பவான் வருத்தம்!

0
562

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டர் இருக்கிறார். அதுதான் மிகப்பெரிய வித்தியாசத்தை கொடுக்கிறது என உலகக்கோப்பை வென்ற பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆக்கிப் ஜாவத் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி துவங்குகிறது. கடந்த நான்கு வருடங்களாக கொரோனா தொற்று மற்றும் இன்ன பிற காரணங்களுக்காக ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் பாகிஸ்தானில் நடக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் சென்று இந்திய அணியால் பங்கேற்க முடியாது என்பதால் மொத்தமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

ஆசிய கோப்பை தொடருக்கான போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டது. அதேநேரம் அதில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி மற்றும் வங்கதேச அணி வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது. தற்போது இருந்தே முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் ஆசிய கோப்பைக்கான தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய அணி வீரர்கள் பற்றி குறிப்பிட்டு சில கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார் உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆக்கிப் ஜாவத். 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காயம் காரணமாக அவ்வப்போது ஓய்வில் இருந்தார். 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நல்ல உடல் தகுதியில் இருந்ததால் உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் சந்தித்தபோது 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் அபாரமான பங்களிப்பை கொடுத்தார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். கூடுதலாக கேப்டன் பொறுப்பில் இருந்து, முதல்முறையாக குஜராத் அணிக்கு கோப்பையை பெற்றுதந்தார். இதன்காரணமாக சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதிலும் அபாரமாக செயல்பட்டார்.

இந்நிலையில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா இருப்பது மிகப் பெரிய வித்தியாசத்தை கொடுக்கிறது என்று ஆக்கீப் ஜாவத் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “இந்திய அணியில் பேட்டிங் எந்த அளவிற்கு அபாரமாக இருக்கிறதோ, அதேபோன்று பாகிஸ்தான் அணிலும் பேட்டிங் மிகச்சிறப்பாக இருக்கிறது. ரோகித் சர்மா, பேட்டிங் நன்றாக அமைந்துவிட்டால் ஒரு போட்டியில் தனி ஒருவராக நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்து விடுவார். அதேபோல பாகிஸ்தான் அணிலும் பக்கர் ஜமான் இருக்கிறார். பந்துவீச்சும் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் அணியில் அந்த ஒரு குறைபாடு இருக்கிறது. இதுதான் மிகப்பெரிய வித்தியாசத்தை கொடுக்கிறது. உலகக்கோப்பை போட்டியில் தனி ஒருவராக நின்று ஹர்திக் பாண்டியா போராடினார்.”என தனது கருத்தில் குறிப்பிட்டார்.

காயம் காரணமாக அவ்வபோது உள்ளே வெளியே என மாறி மாறி இருந்த ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய டி20 அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவாகி இருக்கிறார். சந்தேகத்திற்கு இடமின்றி வருகிற உலக கோப்பை டி20 தொடரிலும் ஹர்திக் பாண்டியா நிச்சயம் இடம்பெற்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.