“நாங்க முதல் 34 ஓவர்லயே தோத்துட்டோம்.. இந்த இடத்துல மாறலனா எதுவும் பண்ண முடியாது!” – பாபர் அசாம் வேதனையான பேச்சு!

0
917

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மிக முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் பாகிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 163 ரன்கள் குவித்தார். அவர் 10 ரன்களில் இருக்கும் பொழுது தந்த கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீணடித்தது. அந்த இடத்திலிருந்து அவர் 153 ரன்கள் சேர்த்தார்.

- Advertisement -

மேலும் அவருடன் சேர்ந்து மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் சதம் அடித்து அசத்தினார். இந்த ஆஸ்திரேலியா துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தது. இவர்களுக்குப் பிறகு வந்த எந்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேனும் நல்ல பங்களிப்பை செய்யவில்லை. இதனால் ஆஸ்திரேலியா 367 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தும் நடுவில் வந்த வீரர்கள் சரியாக விளையாடாத காரணத்தினால் 305 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. நான்காவது ஆட்டத்தில் விளையாடிய பாகிஸ்தானுக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.

பாகிஸ்தான் அணி இரண்டாவது தோல்வியை நான்காவது ஆட்டத்தில் பெற்று இருந்தாலும் கூட, அந்த அணி வெற்றி பெற்றது இரண்டும் சிறிய அணிக்கு எதிராக இருக்கிறது. அதே சமயத்தில் தோல்வி அடைந்த இரண்டு அணிகளும் பெரிய அணிகளாக இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு மங்கலாகவே இருக்கிறது.

- Advertisement -

தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் “முதல் 34 ஓவர்களில் நாங்கள் நிறைய ரன்களை கொடுத்து விட்டோம். நாங்கள் வார்னருக்கு கேட்ச் தவற விட்டோம். அப்படியான பேட்டர்கள் உங்களை விடமாட்டார்கள். இது ஒரு பெரிய ஸ்கோரிங் மைதானம். நாங்கள் எங்களுடைய மார்க்கை இங்கு தவறவிட்டோம்.

மேலும் கடைசி பதினைந்து ஓவர்களில் எங்களுடைய பந்துவீச்சாளர்கள், லைன் மற்றும் லென்த்தில் திரும்ப வந்து சிறப்பாக செயல்பட்டதற்கான பெருமை அவர்களுக்குச் சேரும்.

இலக்கை துரத்துவதற்கு முன்னால் எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு சொன்னது என்னவென்றால், எங்களால் இதைச் செய்ய முடியும். நாங்கள் ஏற்கனவே செய்திருக்கிறோம் என்பதுதான்.

பந்து விளக்குகளின் கீழ் நன்றாக வரும். பேட்டிகள் எங்களுடைய துவக்கம் சிறப்பாக இருந்தது. எங்களுக்கு சிறிய பார்ட்னர்ஷிப்புகள் கிடைத்தது. ஆனால் 350 ரன்களை துரத்தும் பொழுது, மிடில் ஓவர்களில் பெரிய பார்ட்னர்ஷிப்புகள் தேவை. நேர்மையாக பந்துவீச்சில் முதல் 10 ஓவர்களிலும், பேட்டிங்கில் மிடில் ஓவர்களிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும்!” என்று கூறினார்!