நாங்க டி20ல வேற மாதிரி.. கடைசி ஓவரில் வைத்து இந்திய அணியை வென்ற வெஸ்ட் இண்டீஸ்!

0
6620
Indvswi2023

இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று வெஸ்ட் இண்டீஸ் தீவுக் கூட்டத்தில் நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் இருவரும் அறிமுகமானார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் திரும்பினார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்கம் தரவந்த அதிரடி ஆட்டக்காரர் கைய்ல் மேயர்ஸ், இந்த ஆட்டத்தில் வாய்ப்பு பெற்று சாகல் வீசிய முதல் பந்தில் அப்பீல் கேட்காமல் பரிதாபமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங்கையும் சாகல் வெளியேற்றினார். மூன்றாவதாக களம் இறங்கிய சார்லஸ் குல்தீப் பந்தில் மூன்று ரன்கள் வெளியேறினார்.

இதற்கு அடுத்து களத்திற்கு வந்த நிக்கோலஸ் பூரன் கேப்டன் ரோமன் பவலுடன் சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. நிக்கோலஸ் பூரன் 34 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். கேப்டன் பவல் அதிகபட்சமாக 32 பந்தில் 48 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சாகல் மற்றும் அர்ஸ்தீப் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த கில் 3 மற்றும் இஷான் கிஷான் 6 ரன்களில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான ஜோடியான சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். சூரியகுமார் யாதவ் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அறிமுக ஆட்டத்தில் விளையாடிய திலக் வர்மா தான் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் சிக்ஸர்கள் விளாசி ஆச்சரியப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 22 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பொறுப்பாக விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ஹோல்டரின் சிறப்பான பந்தில் 19 ரன்களுக்கு வெளியேறினார். இந்த ஆட்டத்தில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் மேயர்ஸ் அடித்த மிகச் சிறப்பான த்ரோவால் 12 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

இந்த நிலையில் நான்கு ஓவர்களுக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அக்சர் படேல் 13, குல்தீப் யாதவ் 3, அர்ஸ்தீப் சிங் 11 என வரிசையாக வெளியேற, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்காய், ஹோல்டர் மற்றும் ஷெப்பர்ட் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியை வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி!