இலங்கை அணிக்கு பீல்டராக மாறி கேட்ச் பிடிக்க முயன்ற நடுவர் குமார் தர்மசேனா ; ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கலகலப்பு – வீடியோ இணைப்பு

0
745

ஆஸ்திரேலிய அணி மூன்று டி20, ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் விளையாட இலங்கை நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை மக்களில் கிரிக்கெட் இரசிகர்களாக இருப்பவர்களுக்கு இது ஒரு கவலை மறக்கும் விசயமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் செய்வதற்கு முன், இலங்கையில் அரசுக்கு எதிராக ஏற்பட்ட மக்கள் புரட்சியில் கலவரங்கள் வெடித்தது. ஆனால் இதனை தாண்டி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்தது, இலங்கை பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவும் நாடல்ல என்றும் உலக அரங்கில் நிறுவப்பட்டு இருக்கிறது!

இதில் முதல் தொடராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளை வென்றே கைப்பற்றி இருந்தது. ஆனால் கடைசிப் போட்டியில் இலங்கை கேப்டன் டசன் சனகாவின் மிகச் சிறப்பான அதிரடியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இது இலங்கை அணி வீரர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது.

- Advertisement -

இதற்கடுத்து ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பித்தது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி சிறப்பான பந்துவீச்சால் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணித்தரப்பில் முன்னணி வீரர்கள் காயமடைந்திருக்க, ஓரளவுக்குப் பலம் குறைந்த அணியாகவே ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டாஸில் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா 291 ரன்களை ஆறு விக்கெட் இழப்பிற்குக் குவித்தது. இதையடுத்துக் களமிறங்கிய இலங்கை அணி பதும் நிஷாங்காவின் அபார சதத்தால் ( 137 [147] ) ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முன்னாள் இலங்கை அணி வீரரான குமார் தர்மசேனா கள நடுவராகப் பணியாற்றினார். ஆட்டத்தில் சமீரா வீசிய 31.2வது பந்தை, அலெக்ஸ் ஹேரி தூக்கியடிக்க பார்க்க, பந்து லெக்-ஸைட் லெக்-அம்பயராக நின்று கொண்டிருந்த குமார் தர்மசேனா பக்கம் போக, அவர் தான் ஒரு அம்பயர் என்பதையே மறந்து, ஒரு நொடி பந்தை பிடிக்கப் போய், பின்பு சட்டென சுதாரித்துப் பந்தை பிடிக்கும் முயற்சியை கைவிட்டு நகர்ந்தார். அவருக்குள் இருக்கும் கிரிக்கெட் வீரர் ஓரிரு நொடிகள் வெளியே வந்ததைப் பார்க்க நகைச்சுவையாக இருந்தது!

- Advertisement -