ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஓவரில் இரண்டு கைகளிலும் பந்துவீசி அசத்திய தமிழக வீரர் – வீடியோ இணைப்பு

0
3314
Nivedhan Radhakrishnan Bowling

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இந்த தொடர் தொடங்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அனைத்து முன்னணி நாடுகளும் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இது போன்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர்களில் சிறப்பாக விளையாடிய பலர் தற்போது சீனியர் அணியில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடினால் நேரடியாக சீனியர் அணிக்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் இந்தத் தொடர் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிக் கொண்டன. முதலில் மேற்கிந்தியத்தீவுகள் பேட்டிங் பிடித்தது. ஆட்டத்தின் 16-வது ஓவரை தமிழகத்தைச் சேர்ந்த நிவேதன் ராதாகிருஷ்ணன் வீச வந்தார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காரைக்குடி மற்றும் திண்டுக்கல் அணிகளுக்காக இவர் விளையாடி உள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்தது. அதிலிருந்து ஆஸ்திரேலியா நாட்டில் சிறப்பாக விளையாடி தற்போது உலக கோப்பை தொடரிலும் இடம் பிடித்துள்ளார் நிவேதன் ராதாகிருஷ்ணன். இவரது சிறப்பு என்னவென்றால் வலது கை மற்றும் இடது கை என இரண்டிலும் சுழற்பந்து வீச்சை சிறப்பாக கையாளுவது தான். நேற்றைய ஆட்டத்திலும் இவரின் திறமை சிறப்பாக வெளிப்பட்டது.

- Advertisement -

16வது ஓவரின் முதல் பந்தை இடது கையிலும் அடுத்த பந்தை வலது கையிலும் வீசி அசத்தினார் நிவேதன். மேலும் இந்த ஆட்டத்தில் இவர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு வலு சேர்த்தார். இதுகுறித்து நிவேதன் பேசுகையில் ஒவ்வொரு முறையும் வலது கையையும் இடது கையையும் மாற்றி பந்துவீசும் போதும் அதைக்குறித்து நடுவரிடம் அறிவிக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு பேட்டிங் வீரர் வலது புறமோ இடது புறமோ மாற்றி விளையாடும் போது அவ்வாறு அறிவிக்க வேண்டியதில்லை. இந்நிலை மாற வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இதில் சிறப்பாக பங்காற்றி ஆஸ்திரேலிய அணிக்கு சீக்கிரம் விளையாட தகுதி பெறுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.