இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி நேற்று பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் முதல் நாளான நேற்று முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 50 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி இன்று முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது.
இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய தாகூர் 61 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் கடைசி செஷனில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆட்டம் ஆரம்பித்த சில ஓவர்களிலேயே கேஎல் ராகுல் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
வாய்ச் சண்டையில் ஈடுபட்ட கேஎல் ராகுல் மற்றும் டீன் எல்கர்
ஏழாவது ஓவரின் 5-வது பந்தை மார்கோ ஜென்சன் கேஎல் ராகுலுக்கு எதிராக வீசினார். 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அந்த பந்தை மேற்கொண்ட கே எல் ராகுல், தனது விக்கெட்டை சிலிப் பகுதியில் நின்று கொண்டிருந்த மார்க்ரம்மிடம் பறிகொடுத்தார். அந்த பந்து அவரது பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி நேராக ஸ்லிப் பகுதிக்குச் சென்றது. அந்த பந்தை மார்க்கம் முன் புறமாக டைவ் அடித்து லாவகமாக பிடித்தார்.
நடுவர்கள் அவுட் என கூறியும் உடன்பாடு இல்லாமல் கே எல் ராகுல் மைதானத்தை விட்டு நகர மறுத்தார். எனவே நடுவர்கள் மீண்டும் அந்த முடிவை மூன்றாம் நடுவருக்கு எடுத்துச் சென்றனர். மூன்றாவது நடுவர் மீண்டும் வீடியோவை ஆராய்ந்து பார்க்கையில், பந்து மார்க்கம் விரல்களுக்கு மேலே இருந்தது போலவே தெரிந்தது. எனவே மூன்றாவது நடுவரும் கே எல் ராகுல் அவுட் என்று கூறினார்.
இருப்பினும் இறுதி வரை துளியும் உடன்பாடு இல்லாமல் கேஎல் ராகுல் மிகுந்த ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு நகர தொடங்கினார்.
அவர் நடந்து செல்கையில் சற்று தூரமாக ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்க அணி வீரர்களும் ஒன்றாக நின்று கொண்டிருந்தனர். திடீரென தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் கேஎல் ராகுலை பார்க்க, இவரும் பதிலுக்கு அவரைப் பார்க்க பிரச்சனை அந்த நொடியில் வாக்குவாதமாக தொடங்கியது.ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த இருவரும் திடீரென மாறிமாறி வாய்ச் சண்டையில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரும் அவ்வாறு வார்த்தைகளால் சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Rahul and Elgar have an exchange. Not a pleasant one by the looks of it #INDvSA pic.twitter.com/whSm16T8gv
— Benaam Baadshah (@BenaamBaadshah4) January 4, 2022
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இன்று 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் குவித்து, தென்னாப்பிரிக்க அணியை விட 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அஜிங்கிய ரஹானே 11 ரன்களிலும், புஜாரா 35 ரன்களிலும் அவுட் ஆகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.