டெல்லியில் நடந்தது சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. ஆட்டத்தின் கடைசி பந்து வரை யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்க விறுவிறுப்பான போட்டி நடந்தது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் கர்நாடக அணி பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கர்நாடக அணியின் முதல் நான்கு வீரர்களில் ஒருவர் கூட 20 ரன்களை கடக்கவில்லை. தமிழ்நாடு அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன் பின்பு கர்நாடக அணியின் மிடில் ஆர்டர் வீரர்களான மனோகர் துபே மட்டும் சுச்சித் இணைந்து கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி கர்நாடக அணி 151 ரன்களுக்கு அழைத்துச் சென்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். பின்பு களம் கண்ட தமிழ்நாடு அணிக்கு ஹரி நிஷாந்த் சிறப்பான துவக்கம் கொடுத்தார். ஆனால் அவர் ரன் அவுட் ஆனபிறகு ரன் எடுக்கும் வேகம் சீராக குறையத் துவங்கியது. ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் தமிழ்நாடு அணி வெறும் 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஜெகதீசன் மற்றும் விஜய் சங்கர் இருவரும் நிதானமாக ஆடி வெற்றி பெற்றுத் தருவார்கள் என்று நினைத்தபோது இருவருமே அடுத்தடுத்த பந்துகளில் ஒரே மாதிரியான ஷாட் விளையாடி ஆட்டமிழந்தனர். அவ்வளவுதான் ஆட்டம் கர்நாடகா பக்கம் சென்று விட்டது என்று தமிழ்நாடு ரசிகர்கள் நினைத்தபோது கர்நாடகா வீரர் தர்ஷன் வீசிய 17வது ஓவரில் மொத்தம் 19 ரன்கள் தமிழக அணிக்கு கிடைத்தது இதற்கு முக்கிய காரணம் ஷாருக்கான். இருந்தாலும் கடைசியில் ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷாருக்கான் நிதானமாக விளையாடி வெற்றி பெற்றுக் கொடுத்தார். அதுவும் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாரமாக சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார்.
What a moment. , What a last ball victory 🔥🔥🔥🔥 #smat2021 #SMAT #SyedMushtaqAliTrophy #tnvskar #sharukhkhan #sharukkhan #TamilNadu pic.twitter.com/OthlNoPgUL
— Mark (@Mark_2901_) November 22, 2021
இதன்மூலம் தமிழ்நாடு அணி மூன்றாவது முறையாக சையத் முஷ்டாக் கோப்பையை பெற்றுள்ளது. வேறு எப்படியும் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியது கிடையாது. அதேபோல 50 மற்றும் 20 ஓவர் தொடர்களில் இறுதிப்போட்டியில் ஒருமுறைகூட கர்நாடக அணி தோற்றது கிடையாது என்ற வரலாற்றையும் தமிழ்நாடு உடைத்து விட்டது. இந்தத் தொடர் மூலம் எத்தனை தமிழக வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.