64 பந்தில் 154 ரன்கள் ; பிக் பேஷ் லீக்கில் வரலாற்று சாதனை படைத்துள்ள கிளென் மேக்ஸ்வெல் – வீடியோ இணைப்பு

0
1724
Glenn Maxwell 154 BBL

2021 – 2022 பிக் பேஷ் லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 56வது போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி ஹோபார்ட் ஹரிக்கன்ஸ் அணியை எதிர்கொண்டது.. டாஸ் வென்ற மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் மேக்ஸ்வெல் மற்றும் கிளார்க் களமிறங்கினார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி நல்ல அடித்தளத்தை அமைத்தது. 7வது ஓவரின் கடைசி பந்தில் கிளார்க் 35 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த நிக் லார்க்கின் 7 பந்தில் 3 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் – ஸ்டோய்னிஸ் எதிரணி பந்துவீச்சாளர்களை நாலாப் பக்கமும் சிதறடித்தனர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 22 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசி 150 ரன்களைக் கடந்தார். பிக் பேஷ் தொயரில் இது இவரது 2வது சதம் ஆகும். இதற்கு முன் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக 57 பந்தில் 103 ரன்கள் எடுத்திருந்தார்.

- Advertisement -

இப்போட்டியில் மேக்ஸ்வெல் அடித்த 154 ரன்கள், பி.பி.எலில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது. மேலும் அவர் விளாசிய 22 பவுண்டரிகளின் மூலம் ஓர் சாதனையைப் படைதுள்ளார். ஒரு டி20 போட்டியில் அதிக பவுண்டரிகள் சேர்த்த வீரரும் தற்போது மேக்ஸ்வெல் தான். ஒரு பக்கம் மேக்ஸ்வெல் 150 ரன்களைக் கடக்க மறுமுனையில் ஸ்டோய்னிஸ் சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 31 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் மொத்தம் 75 ரன்கள் அடித்தார்.

20 ஓவரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது. உலக அளவில் இது 2வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதல் இடத்தில் 278 ரன்கள் உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மற்றும் டர்க்கி அணிக்கு எதிராக செக் குடியரசு அணிகள் அதை நிகழ்த்தின. 274 ரன்கள் எனும் இமாலய இலக்கை நோக்கி ஹோபார்ட் ஹரிக்கன்ஸ் பயணித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அவர்களால் 167 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிகபட்சமாக மெக்டர்மாட் 55, ஷார்ட் 40 மற்றும் பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் 28 ரன்கள் எடுத்தனர். 106 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.