காயத்திலிருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பிய ஜோப்ரா ஆர்ச்சர் – மும்பை இந்தியன்ஸ் டுவீட் செய்துள்ள வீடியோ இணைப்பு

0
699
Jofra Archer

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மிகவும் எளிதாக வெற்றி பெற்றது. விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்த இந்த போட்டி விறுவிறுப்பு எதுவுமின்றி மூன்று நாட்களுக்குள் முடிவு எட்டப்பட்டது. அடுத்த டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக பெங்களூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒரு பக்கம் டெஸ்ட் தொடர் நடந்து வந்தாலும் தற்போதைய ரசிகர்களின் கவனம் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பிவிட்டது. வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது.

இந்த முறை 10 அணிகள் கொண்ட தொடராக ஐபிஎல் விளையாடப்பட உள்ளது. கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள நான்கு மைதானங்களில் மட்டுமே அனைத்து லீக் போட்டிகளும் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து அணிகளுமே தற்போதே பயிற்சிகளை தொடங்கிவிட்டன. ஐபிஎல் தொடரின் மிகவும் சிறப்பான அணிகளுள் ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணி. இந்திய அணியின் ஜாம்பவான் பேட்டிங் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த அணிக்காக விளையாடினார். அதனால் ஆரம்ப காலம் முதலே மணிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர்.

- Advertisement -

சச்சினின் ஓய்வுக்கு பிறகு கேப்டனான தற்போதைய இந்திய அணி கேப்டன் ரோஹித் மிகவும் திறம்பட இந்த அணியை வழிநடத்தி ஐந்து கோப்பைகள் இதுவரை பெற்றுத் தந்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்படும் அணி என்று வர்ணிக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் இந்த முறையும் ஐபிஎல் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டு முக்கியமான ஒரு வீரரை எடுத்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது தெரிந்திருந்தும் அதிக விலை கொடுத்து அவரை வரும் ஆண்டுகளுக்காக வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.

தற்போது ஜோஃப்ரா ஆர்ச்சர் காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி உள்ளார். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது. இந்த ஆண்டு விளையாடா விட்டாலும் அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாட போகும் ஆர்ச்சர் பயிற்சியை தொடங்கியது மும்பை ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பெருவாரியாக பகிரப்பட்டு வருகிறது.