” பழைய முரளி விஜய் மீண்டும் வந்துட்டார் ” தமிழ்நாடு பிரீமியர் லீகில் அதிரடி காட்டிய முன்னாள் சென்னை வீரர் – வீடியோ இணைப்பு

0
724
Murali Vijay

முரளி விஜய் தமிழக கிரிக்கெட்டிலும், இந்திய கிரிக்கெட்டிலும், உலக கிரிக்கெட்டிலுமே மிக அழகாக ஷாட்ஸ் ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களில் ஒரு பேட்ஸ்மேன். கடந்த இரு வருடங்களாகவே எந்தவித கிரிக்கெட் தொடர்பான நிகழ்வுகளிலுமே அவரைக் காணமுடியாமலே இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணிக்காக விளையாட வந்திருக்கிறார்!

ஐ.பி.எல் தொடரில் ஆரம்பத்தில் சென்னை அணிக்காக விளையாடியவர் மிகச்சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார். பின்பு டெல்லி அணிக்கும், அதற்குப் பிறகு பஞ்சாப் அணிக்கும் சென்று, அங்கு கேப்டனாகவும் சில போட்டிகளில் செயல்பட்டிருக்கிறார். இறுதியில் 2018ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் சென்னை அணிக்காக இரண்டு கோடிக்கு வாங்கப்பட்டார்.

- Advertisement -

அந்த ஒரு போட்டியிலும், அதற்கடுத்த ஆண்டில் இரண்டு போட்டியிலும், இறுதியாக 2020 ஆம் ஆண்டில் மூன்று போட்டிகளிலும் விளையாட சென்னை அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதற்கடுத்து 2021ஆம் ஆண்டு நடந்த மினி ஏலத்தில் இவரை சென்னை அணி விடுவித்தது. இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ஐம்பது இலட்ச அடிப்படை விலையில் வந்த இவரை யாரும் வாங்கவில்லை. இறுதியாக சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு விளையாடி இருந்தார்!

நேற்று திருநெல்வேலி இன்டியன் சிமென்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. டாஸில் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் அனிருதா ஸ்ரீகாந்த் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி திருச்சி ரூபி வாரியர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அமித் சாத்விக், முரளி விஜய் களமிறங்கினார்கள். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினார் முரளி விஜய். ஆனால் அதிரடியாய் விளையாடினாலும் வழக்கம்போல் அவரது ஷாட்ஸ்கள் படு ஸ்டைலிஷாக பார்ப்பதற்கே அருமையாக இருந்தது. இந்த ஆட்டத்தில் 16 பந்துகளில் 34 ரன்களை மட்டுமே அடித்து அவர் ஆட்டமிழந்தாலும், இதில் அவர் அடித்த ஆறு பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் இரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் திருச்சசி ரூபி வாரியர்ஸ் அணி சிறப்பான துவக்கத்தைப் பெற்றபோதும், திருப்பூர் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய திருப்பூர் அணியும் 14.1 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஆறு விக்கெட்டை இழந்தாலும், அடுத்து இணைந்த துஷார் ரஹேஜா-முகம்மத் ஜோடி அதிரடியாய் 60 ரன்களை குவிக்க, 18.5 ஓவர்களில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தியது. திருப்பூர் அணியின் ஆல்ரவுண்டர் எம்.மொகம்மத் ஆட்டநாயகன் விருது பெற்றார்!