இந்திய கிரிக்கெட்

இலங்கை தொடர் தோல்வி.. இந்திய அணியை கிண்டல் செய்த வாகன்.. 12 வருடத்தை வைத்து பதிலடி தந்த வாசிம் ஜாஃபர்

இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. 27 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வி கண்டுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்தின் மைக்கேல் வாகனின் கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளில் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரையும் மோசமாக இழந்தது. மேலும் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் இருந்தும் இந்திய அணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு கவனம் ஈர்க்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் சமூக வலைதளமான ட்விட்டரில் இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபருடன் உரையாடினார்.

- Advertisement -

அப்போது பேசிய மைக்கேல் வாகன் “ஹாய் வாசிம், சமீபத்தில் இலங்கையில் நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் முடிவு என்ன? நான் தொலைவாக இருந்ததால் அதைக் காண தவற விட்டேன். ஆனால் அனைத்தும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று வாசிம் ஜாஃபரிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் மைக்கேல் வாகன் அனைத்தையும் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே ஜாஃபரிடம் கேட்பது போலவே இருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக வாசிம் ஜாஃபர் “உங்களுக்காக நான் அதை ஆஷஸ் பாணியில் கூற விரும்புகிறேன். கடந்த 12 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்றதை போல இந்திய அணியும் தற்போது வெற்றி பெற்றுள்ளது” என்று கூறியிருக்கிறார். அதாவது ஆஷஸ் தொடரில் கடந்த 12 வருடங்களாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளை வென்றதில்லை.

இதையும் படிங்க:27 வருடத்திற்கு பின் தோல்வி.. இருந்தும் இந்திய அணிக்கு லட்டு மாதிரி 2 விஷயம் கிடைச்சிருக்கு – தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி

அதனை குறிப்பிடும் விதமாகவே வாசிம் ஜாஃபர் இந்திய அணி தோல்வி அடைந்ததை குறிப்பிடும் விதமாக மைக்கேல் வாகனுக்கு அவரது பாணியிலேயே தனது பதிலடி கொடுத்திருந்தார். இந்தப் பதிவு தற்போது கவனம் ஈர்க்கும் நிலையில் இதைக் கண்ட ரசிகர்கள் தற்போது இதனை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

- Advertisement -
Published by