இந்திய கிரிக்கெட்டில் சேவாக் மற்றும் சச்சினின் கலவையாக பிரிதிவி ஷா பார்க்கப்பட்டார். எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக சதமும் அடித்தார். அவருக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்க ஆரம்பித்தது. ஆனால் திடீரென உடல் தகுதி மற்றும் ஊக்க மருந்து பிரச்சனையில் சிக்கிய அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை அப்படியே சரிவுக்கு உள்ளாகி, இன்று முற்றிலும் சீர்குலைந்து இருக்கிறது.
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 1.20 கோடி ரூபாய்க்கு இவரை வாங்கியது. தற்போது இவர் எட்டு கோடி ரூபாய்க்கு அந்த அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகிறார். 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 16 போட்டிகளில் 353 ரன்களும், 2021 ஆம் ஆண்டு 15 போட்டிகளில் 479 ரன்களும் எடுத்திருந்தார். இந்த இரண்டு ஐபிஎல் சீசன்களும் இவருக்கு குறிப்பிடும்படி அமைந்திருந்தன.
இதுவரையில் ஆறு ஐபிஎல் சீசன்களில் நான்கு ஐபிஎல் சீசன்கள் இவருக்கு சரியாக செல்லவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் எட்டு போட்டிகளில் விளையாடி வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவருடைய பேட்டிங் சொதப்பல், ஏற்கனவே மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பெரும் பிரச்சனையாக மாறியது. இது மட்டும் இல்லாமல் ஏதோ ஒழுங்கு நடவடிக்கை இவர் மீது எடுக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு கூறப்பட்டிருந்தது. ஆனால் அதில் உண்மை என்னவென்று தெரியவில்லை.
இந்த நிலையில் தற்பொழுது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் விளையாடி வருகிறார்கள். பிரிதிவி ஷாவுக்கு பயிற்சியாளர்களாக இருக்கும் ரிக்கி பாண்டிங் மற்றும் சௌரவ் கங்குலி இருவரும் இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை. இதன் காரணமாக அவர்களுடைய மிடில் ஆர்டர் இன்னும் பலவீனமாக மாறுகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி கூறும் பொழுது “நீங்கள் உங்களுடைய அணியில் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச துவக்க ஆட்டக்காரரை வைத்துக்கொண்டு, அவரை விளையாட வைக்காமல் இருப்பதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. அவர் ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்தது போல் செயல்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவருக்கு வாய்ப்பே தராமல் ரன் அடிப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 5வதா பேட்டிங்கில ஒரு ஆப் ஸ்பின்னர் வந்தாரு.. பெரிய வேலைய பாத்துட்டாரு – அஸ்வின் பற்றி டெல்லி கோச் பேட்டி
மேலும் இது குறித்து வாசிம் ஜாபர் கூறும் பொழுது “அவரை ஏலத்தில் விடாமல் இவர்கள் வாங்கி வைத்துக் கொண்டு, தற்பொழுது விளையாடுவதற்கும் வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதை பார்த்தால் எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அவர் இந்த ஆண்டு உள்நாட்டு சீசனில் நிறைய போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடுகிறார். எனவே அவர் உடல் தகுதியோடு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். நாம் அவரை தண்டிப்பது என்பது போட்டியில் முன்னோக்கி செல்வதற்கான சிறந்த வழி கிடையாது” என்று கூறியிருக்கிறார்.