விராட் கோலியோடு இப்படி விளையாடினால் ஆபத்துதான் – வாசிம் ஜாபர் கருத்து!

0
110
Wasim Jaffer

கடந்த 2019ஆம் வருடம் நவம்பர் மாதம் முதல் விராட் கோலியின் பேட்டிங் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அது உச்சக்கட்டத்தை எட்டியது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது ரன் சராசரி 20-க்கும் கீழே வந்து மீண்டது. தான் சந்தித்த முதல் பந்தில் மூன்றுமுறை ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இதற்கடுத்து இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கடுத்து இங்கிலாந்துடன் 3 வடிவிலான போட்டிகளுக்கும் திரும்பிய அவர் மீண்டும் ஏமாற்றம் அளித்தார். அவர் ஆட்டம் இழக்கும் முறை மிகவும் சாதாரணமாக இருந்தது கவலைக்குரிய ஒன்றாக அமைந்தது.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல் பலர் விராட் கோலிக்கு கிரிக்கெட்டில் இருந்து ஒரு குறுகிய காலத்திற்கு ஓய்வு தேவை என்று வலியுறுத்தி வந்தார்கள். இதையடுத்து இந்திய அணி நிர்வாகத்திற்கு அருகில் 20 உலகக் கோப்பையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியவில்லை.

இதனால் கடைசி முயற்சியாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் உடனான தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு விராட்கோலி ஒரு மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி குடும்பத்தோடு இருந்தார்.

இதையடுத்து இப்போது நடந்து வரும் ஆசிய கோப்பை இந்திய அணிக்காக இடம் பிடித்த விராட் கோலி, பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் 34 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், 30 பந்துகளை கடந்த விராட் கோலி இயல்பான முறையில் சரளமாக விளையாடவில்லை என்று தான் கூற வேண்டும். தவறான ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார். இதற்கடுத்து ஹாங்காங் அணியுடனான போட்டியில் 44 பந்துகளுக்கு 59 ரன்கள் அடித்து மீண்டும் தனது பழைய பேட்டிங் முறைக்கு நெருங்கி வந்தது போல் தெரிந்தார். இதில் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 134.

- Advertisement -

ஹாங்காங் அணியுடனான போட்டியின்போது ஒருபுறம் கோலி தன் வழக்கமான முறையில் தேவைக்குத் தகுந்தாற்போல் ஆட, மறுமுனையில் கேஎல் ராகுலும் மெதுவாக ஆட 13 ஓவர்களுக்கு இந்திய அணி 94 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. அவர் ஆட்டமிழந்து சூரியகுமார் உள்ளே வந்த பிறகுதான் இந்திய அணியின் ஸ்கோர் எகிற ஆரம்பித்தது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தான் ஜெயித்தது. கத்துக்குட்டி ஹாங்காங் அணி 152 ரன்களை விளாசியது.

இதை கருத்தில் கொண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது ” விராட் கோலி இன்னும் சரளமாக ஆடவில்லை. இது குறித்து நான் கவலைப்படுகிறேன். நாம் அவரை முன்பு பார்த்தது போல் இல்லை. அவர் ரன்கள் எடுத்து இருந்தாலும் அவரிடம் சரளமான பேட்டிங்கை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய வாசிம் ஜாபர் ” விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அவருடன் இணைந்து விளையாடும் வீரர் 140 அல்லது 150 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடாவிட்டால் இந்திய அணி சிக்கலில் இருப்பதாகத்தான் அர்த்தம்” என்று தெரிவித்தார்.

இதை இன்னும் விளக்கமாக பேசியவர் ” விராட் கோலி சேர்ந்து விளையாடும் பொழுது நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளையாட வேண்டும். விராட் கோலி இன்னும் சரளமாக பேட்டிங்கிற்க்கு திரும்பவில்லை. ஆங்காங் அணியுடனான ஆட்டத்தின்போது சூர்யகுமார் யாதவ் உள்ளே வந்து அவ்வளவு பெரிய ஸ்டிரைக் ரேட்டில் ஆடாமல் போயிருந்தால், இந்திய அணி 150 அல்லது 160 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தால், அது பெரிய சிக்கலில் போய் முடிந்திருக்கும் ” என்று கூறினார்!