சர்வதேச கிரிக்கெட்டில் தன்னைவிட பும்ரா சிறந்த பவுலர் என்பது குறித்தான விவாதங்கள் பற்றி பாகிஸ்தான் லெஜன்ட் பவுலர் வாசிம் அக்ரம் வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார்.
தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் தலைசிறந்த ஒரே வேகப்பந்துவீச்சாளராக இந்தியாவின் பும்ரா மட்டுமே இருந்து வருகிறார். மற்றவர்கள் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வடிவத்தில் மட்டுமே சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.
வக்கார் யூனுஸ் கருத்து
இந்த நிலையில் தன்னுடைய வேகப்பந்து வீச்சு பார்ட்னர் வாசிம் அக்ரமை விட பும்ரா சிறந்த பந்துவீச்சாளராக இருப்பதாக தன்னிடம் வக்கார் யூனுஸ் தெரிவித்தார் என ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இருவரில் யார் சிறந்தவர்கள் என்கின்ற விவாதங்கள் பரவத் தொடங்கி இருக்கிறது.
மிகக்குறிப்பாக பும்ரா ஆடுகளத்தை மிகச் சீக்கிரத்தில் புரிந்து கொள்வதும் அதற்கேற்ற வகையில் சரியான திட்டங்களை வகுப்பதும் அவரை மிகச் சிறந்த பந்துவீச்சாளராக மாற்றுகிறது என வக்கார் யூனுஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது பற்றி வாசிம் அக்ரமே நேரடியாக பதில் அளித்து இருக்கிறார்.
இருவரையும் ஒப்பிடலாமா?
இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசும் பொழுது ” பும்ரா ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். அவருடைய செயல்பாடு மற்றும் வேகம் எல்லாம் வித்தியாசமானது. அவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நிர்வகித்து வரும் முறை பாராட்டுக்குரியது. அவர் வலதுகை நான் இடதுகை பந்துவீச்சாளர். என் காலத்தில் நான் சிறந்தவன். அவருடைய காலத்தில் அவர் சிறந்தவர். 90 களுக்கும் இப்பொழுதும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியானது கிடையாது. நாங்கள் எங்கள் வேலையை சரியாக செய்தவர்கள்”
இதையும் படிங்க : என் நண்பன் விராட் கிடையாது.. இந்த 5 பேர்தான் நான் ஆடியதில் சிறந்த வீரர்கள் – ஏபி டிவில்லியர்ஸ் தேர்வு
“என்னுடைய காலத்தில் டி20 கிரிக்கெட் கிடையாது. எனவே எங்கள் இருவரையும் ஒப்பிட முடியாது. என் காலத்தில் மோசமான பந்துகளை விளையாடாமல் பேட்ஸ்மேன்கள் விட்டு விடுவார்கள். ஆனால் தற்பொழுது சிறந்த பந்துகளையும் பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட பார்க்கிறார்கள். இதனால் தற்போது விக்கெட் எடுப்பது கொஞ்சம் எளிதாக இருக்கிறது. என்னுடைய காலத்தில் நாள் முழுவதும் பேட்ஸ்மேன்கள் தற்காப்பாக விளையாடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.






