இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பாதியில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பேக் -அப் பந்து வீச்சாளராக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அஸ்வின் அடுத்த நாளே இந்திய அணியுடன் மீண்டும் இணைந்தார்.
மிகச் சிறந்த ஃபார்மில் அஸ்வின் இந்த தொடரில் விளங்கியதால், அவருக்கு மாற்று வீரராக கருதப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைக்காமல் போனது. மேலும் நான்காவது போட்டியில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டிருந்ததால் சுந்தருக்கு பெரிதாக வேலை இல்லை. பெஞ்சு வீரராகவே உட்கார வைக்கப்பட்டிருந்தார்.
மார்ச் இரண்டாம் தேதி ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணி மும்பை அணியை அரையிறுதியில் சந்திக்கிறது. இதனால் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமிழக அணியுடன் வாஷிங்டன் சுந்தர் இணைவார் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின் படி, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சுந்தர் விளையாடுவார் என்று தெரிகிறது. இதற்கு முன்னர் நடப்புச் சாம்பியன் ஆன சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மீண்டும் அணியுடன் இணைவார் என்று தெரிகிறது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. ஏற்கனவே நான்காவது போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. சிறிது இடைவெளிக்குப் பிறகு மார்ச் 7ஆம் தேதி ரோஹித் அண்ட் கோ ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளனர். அதற்கான அணியைத் தற்போது காணலாம்.
ரோஹித் சர்மா (சி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பாரத் (WK), தேவ்தத் பாடிக்கல், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.