இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் கைப்பற்றிய வாஷிங்டன் சுந்தர் கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் நன்றி கூறி இருக்கிறார்.
இன்று மகாராஷ்டிரா புனே மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
நியூசிலாந்து அணியை சுருட்டிய வாஷிங்டன் சுந்தர்
இந்த போட்டியிலும் மிகச் சிறப்பாக ஆரம்பித்த நியூசிலாந்து அணி 300 ரன்கள் தாண்டி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது செசனில் உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் அங்கிருந்து மொத்தமாக மீதம் இருந்த ஏழு நியூசிலாந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அவர்களை 259 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினார்.
இது குறித்து பேசி இருக்கும் வாஷிங்டன் சுந்தர் கூறும் பொழுது “இந்த போட்டியில் நான் செயல்பட்ட விதம், குறிப்பாக இந்த போட்டிக்கு முன்பாக நான் தமிழக அணியில் இருந்தது, பிறகு நான் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டது என எல்லாவற்றுக்கும் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இந்த செயல்பாடு என்னால் நம்ப முடியாத ஒன்றாக சிறப்பாக அமைந்தது”
இது கடவுளின் திட்டம்
“நான் எந்தச் சூழ்நிலையில் பந்து வீசினாலும் எந்த பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசினாலும் துல்லியமாக இருப்பதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இது கடவுள் எனக்காக போட்ட திட்டம் போல் அமைந்தது. நான் பந்துவீச்சில் சில குறிப்பிட்ட பகுதிகளை தாக்க திட்டமிட்டேன். மேலும் வேகத்தை மாற்றி வீசவும் முயற்சி செய்தேன். ஆடுகளத்தில் முதல் நாளில் பந்து சொல்ல ஆரம்பித்து விடும் என்று தெரியும். ஆனால் இரண்டாவது செசனில் பந்து அந்த அளவுக்கு சுழலவில்லை”
இதையும் படிங்க : உச்சகட்ட பார்ம்ல இருந்தேன்.. அந்த முடிவால் என் கிரிக்கெட் வாழ்க்கையே போச்சு.. தோனியை மறைமுகமாக சாடிய மனோஜ் திவாரி
“இறுதியில் ஆட்டத்தின் மூன்றாவது செசனில் பந்து நன்றாக சூழல ஆரம்பித்தது. எடுத்த ஏழு விக்கெட் களில் பிடித்த விக்கெட் எது என்பது தேர்ந்தெடுப்பது கடினமானது. ஆனால் ரச்சில் ரவீந்தரா சிறப்பாக விளையாடிய முறைக்கும், மேலும் டேரில் மிட்சல் ஆட்டம் இழந்த பந்தும் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.