டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டேவிட் வார்னர்?! – வெளிவந்த தகவல்!

0
1032

டேவிட் வார்னரின் மனைவி சமூக வலைதளத்தில் பதிவிட்ட போஸ்ட் மூலம், டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆசஸ் டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இருக்கிறது. மீதம் 2 போட்டிகள் இருக்கின்றன.

- Advertisement -

இங்கிலாந்து அணி தொடரை வெல்வதற்கு இரண்டிலும் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது. அதேநேரம் ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போதும் என்கிற நிலையும் நீடிக்கிறது.

ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் நன்றாக செயல்பட்டு வந்தாலும், நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னரின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். மொத்தம் 141 ரன்கள் மட்டுமே அடித்து, சராசரி 25-க்கும் குறைவாகவே இருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியில் வேறு சில துவக்க வீரர்கள் நல்ல ஃபார்மில் இருந்தும் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுமா? என்கிற கேள்வியை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம் எழுப்பப்பட்டது.

- Advertisement -

இதற்கு பதில் கூறிய பேட் கம்மின்ஸ், “அணியில் நிறைய வீரர்களுக்கு மாற்று வீரர்கள் இருக்கின்றனர். அடுத்த போட்டியில் கேமரூன் கிரீன், ஹேசல்வுட் இருவரும் வந்துவிடுவார்கள். அவர்களுக்கும் கட்டாயம் இடம் உண்டு. நடந்து முடிந்த டெஸ்டில் மிச்சல் மார்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவரையும் வெளியில் அமர்வது கடினம். அடுத்த போட்டிக்குள் இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன. ஆகையால் சில தினங்களில் ஏதேனும் முடிவுகளை எடுத்து விடுவோம்.” என்று தெரிவித்தார்.

மற்ற வீரர்கள் கட்டாயம் எடுக்கப்படவேண்டும். மார்ஷ் வெளியில் எடுக்கப்பட முடியாது எனக்கூறி, சூசகமாக டேவிட் வார்னர் அடுத்தடுத்த போட்டிகளில் எடுக்கப்படுவது கடினம் என்று பேட் கம்மின்ஸ் சொல்லாமல் சொன்னதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

மேலும் டேவிட் வார்னரின் மனைவி, மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் வார்னர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “சகாப்தம் முடிவுக்கு வந்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு இனி நாங்கள் பயணிக்கப்போவதில்லை. இத்தனை வருடங்கள் நன்றாக இருந்தது. இனியும் நானும் குழந்தைகளும் தொடர்ந்து ஆதரவாக இருப்போம்.” என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் வார்னரின் மனைவி பதிவிட்டு இருந்தார்.

ஏற்கனவே வாரனர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்க உள்ளார். இனி லிமிடெட் ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார் என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இதற்கிடையில் அவரது மனைவி பதிவிட்டது மேலும் சர்ச்சையை மற்றும் வதந்திகளை கிளப்பியுள்ளது.