இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில், கடைசி ஓவர் வரை சென்ற பரபரப்பான ஆட்டத்தில், ஆறு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.
ஆஸ்திரேலியா அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வந்த மேத்யூ வேட் ஒரு வித்தியாசமான வீரராகவே இருந்திருக்கிறார். அவர் ஆஸ்திரேலியா அணித் தவிர்த்து வேறு எந்த டி20 அணிகளுக்கு சென்றாலும் சரியாக விளையாட மாட்டார்.
அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி என்றால் அவருடைய பேட்டிங் எப்பொழுதும் மிக சிறப்பாக அதிரடியாக இருக்கும். பினிஷராக மிகச் சிறப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு செய்து கொடுப்பார். 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரையிறுதியில் சாகின் அப்ரிடியை அவர் அடித்தது மறக்க முடியாதது.
ஆனால் நேற்று அதே இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங்கிடம் கடைசி ஓவரில் பத்து ரன்கள் தேவை என்ற பொழுது எடுபடவில்லை. முதல் இரண்டு பந்துகளை டாட் பந்துகளாக வீசி, மூன்றாவது பந்தில் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கனவும் அதோடு முடிந்தது.
இது குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “அர்ஸ்தீப் தனது முதல் மூன்று ஓவர்களில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். அதனால் அவர் அழுத்தத்தில் இருந்து இருப்பார். மேலும் யார்க்கர்களும் அவருக்கு சரியாக வரவில்லை. ஆனால் கடைசி ஓவரின் முதல் பந்தை ஷார்ட் பந்தாக அவர் வீசியது என்னை ஈர்த்தது.
மேத்யூ வேட் அந்த சமயத்தில் மிகவும் கோபமாக இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள். அவர் பந்து வைடு என்று நினைத்தார். அதே சமயத்தில் அர்ஸ்தீப் அவரது மனநிலைக்கு சவால் விட்டார். வெளியில் இருந்த நாம் எல்லோருமே யார்கர் வீசுவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் ஷார்ட் பந்து வீசினார். அவருடைய உடல் மொழியில் அவருடைய மனநிலை மிகுந்த கட்டுப்பாட்டில் இருந்ததை காட்டியது.
நாங்கள் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது சூரியகுமார் ரசிகர்களிடம் அர்ஸ்தீப்பை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஏனெனில் கடைசி ஓவரை அப்படி வீசுவது எளிதானது கிடையாது. மேத்யூ வேட் அப்படியான நேரத்தில் எப்படி பேட்டிங் செய்வார் என்று நாம் பார்த்திருக்கிறோம்.
வெற்றிக்கு பத்து ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஒரே ஒரு பெரிய ஷாட் அடித்தால் ஆட்டம் அங்கேயே முடிந்து விட்டது. ஆனால் அவர் சிறப்பான யார்க்கர்களை இறக்கினார். குறிப்பாக அவர் மாத்தி வேட்க்கு எதிராக சிறப்பான குணாதிசயத்தை காட்டினார் என்று கூறவேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!