உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெறும் 4 அணிகள் இவை தான்! – சேவாக் கணிப்பு!

0
15215

இந்தியாவில் நடைபெற உள்ள 50-ஓவர் உலகக்கோப்பையில் அரை இறுதிச்சுற்றுக்கு எந்தெந்த 4 அணிகள் தகுதி பெறும் என்று உலகக்கோப்பை அட்டவணை வெளியிடும் நிகழ்வில் கணிப்பை தெரிவித்துள்ளார் விரேந்திர சேவாக்.

50 ஓவர் உலகக்கோப்பை இந்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

- Advertisement -

8 அணிகள் தரவரிசை பட்டியலில் அடிப்படையில் உறுதியாகிவிட்டது. மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கு குவாலிஃபயர் சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகிறது. உலகக்கோப்பை குவாலிஃபையர் சுற்று ஏற்கனவே ஜிம்பாப்வேயில் துவங்கி நடைபெற்று வருகிறது.

உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்தனர். இன்று மும்பையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் ஐசிசி அதிகாரிகள் மற்றும் பிசிசிஐ தரப்பில் ஜெய் ஷா உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். அத்துடன் விரேந்திர சேவாக் மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்களும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் வீரேந்திர சேவாக் மற்றும் முத்தையா முரளிதரன் இருவருமே பேசினர். அப்போது தொகுப்பாளர் கௌரவ் கபூர் சில கேள்விகளை சேவாக் முன்பு வைத்தார். அதில் ஒன்றாக, எந்த நான்கு அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்? உங்களது கணிப்பு என்ன? என்றார்.

- Advertisement -

“கண்டிப்பாக அதில் ஒன்று இந்திய அணி என்பதில் சந்தேகம் இல்லை. சமீபகால செயல்பாடுகள் வைத்து பார்க்கையில் பாகிஸ்தான் அணி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. கண்டிப்பாக அவர்கள் அரை இறுதி சுற்றுக்கு வந்து விடுவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. ஆஸ்திரேலிய அணியை நான் எப்படி மிஸ் செய்வேன்? அவர்களும் செமி பைனலுக்கு வந்து விடுவார்கள். காலம் காலமாக ஆக்ரோஷமான கிரிக்கெட் வெளிப்படுத்தி வருகிறார்கள்.” என்றார்.

மேலும் பேசிய சேவாக், “இந்தியா-பாகிஸ்தான் போட்டியை அகமதாபாத் மைதானத்தில் காண்பதற்கு எல்லோரையும் போல நானும் ஆவலாக இருக்கிறேன். போட்டிக்கு முன்பு சமூக வலைதளங்களில் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. அதில் என்னுடைய நண்பர் சோயிப் அக்தருடன் நானும் போரில் இறங்குவேன்.” என்று சிரித்தபடியே பேட்டியில் கூறினார்.