“விராட் கோலி ஓய்வு பெறும் நேரம் வந்துருச்சு” – சோயிப் அக்தர் சர்ச்சை பேச்சு!

0
90

விராட் கோலி டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு பெற்று விடுவார் என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார் சோயிப் அக்தர்.

கிட்டத்தட்ட மூன்று வருட காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி சதம் அடிக்காமல் சிரமப்பட்டார். பல போட்டிகளில் 50 அல்லது 50 அல்லது 60 ரன்களை கடந்தபிறகும் அதனை சதமாக மாற்ற இயலாமல் தவித்து வந்தார். இதனால் அவரது சராசரி நாளுக்கு நாள் 50க்கும் கீழே செல்கிறது என்ற எண்ணற்ற பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டு வந்தன.

- Advertisement -

இவை அனைத்திற்கும் முடிவு கட்டும் விதமாக ஆசிய கோப்பை தொடரின் தனது கடைசி போட்டியில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். மேலும் முதல் முறையாக டி20 போட்டிகளிலும் சதம் அடித்து கூடுதல் நம்பிக்கை கொடுத்தார். இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றில் வெளியேறிய போதும், விராட் கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பி இருப்பதால் இந்திய ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு இன்னும் சில வார காலங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்குள் விராட் கோலியின் பார்ம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்பதாலும், இந்த சதம் கூடுதல் கவனம் பெற்றது.

வருகிற அக்டோபர் 16ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடர் துவங்கி நவம்பர் இரண்டாம் வாரம் வரை நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் உலகில் இது குறித்த பேச்சுக்கள் மட்டுமே நிலவி வருகிறது. இந்த நிலையில் விராட் கோலி டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்றவுடன் ஓய்வு பெறுவார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் பேசிய கருத்து திடீர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

“டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு விராட் கோலி ஓய்வு முடிவை அறிவிப்பார், மற்ற இரண்டு விதமான போட்டிகளிலும் விளையாடுவதற்கு அவர் கவனம் செலுத்த டி20 போட்டிகளில் இருந்து இந்த ஓய்வு முடிவு எடுப்பார். நான் மட்டும் அவரது இடத்தில் இருந்தால் இந்த ஒரு முடிவை எடுத்திருப்பேன். இந்திய அணியில் அவரது எதிர்காலத்திற்கு இதுதான் சரியான முடிவு.” என்றார்.

- Advertisement -

இந்திய அணிக்காக மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் 100 போட்டிகளுக்கும் அதிகமாக விராட் கோலி விளையாடியுள்ளார். 104 டி20 போட்டியில் விளையாடியுள்ள விராட் கோலி இதுவரை 3584 ரன்கள் அடித்துள்ளார். இவரது சராசரி 51.9 ஆகும்.

டி20 உலககோப்பை தொடர் முடிவுற்ற பிறகு இந்திய அணிக்கு அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை எந்தவித டி20 போட்டிகளும் இல்லை. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அதற்கு இடைப்பட்ட காலங்களில் போதுமான அளவிற்கு ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாகவும் டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்றவுடன் ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடர் மற்றும டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இரண்டிலும் முழு கவனம் செலுத்துவதற்கு விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஆலோசிக்கலாம் என்ற கணிப்புகளும் நிலவுகிறது.

சோயிப் அக்தருக்கு முன்னதாக மற்றொரு பாகிஸ்தான் லெஜெண்ட் சாகித் அப்ரிடி இந்த கருத்தினை முன் வைத்திருக்கிறார். விராட் கோலியின் இத்தனை வருட அசாத்தியமான கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி புகழாரம் சூட்டிய அவர் டி20 போட்டிகளில் இளம் வீரர்களின் தாக்கம் அதிகரித்து வருவதால் விராட் கோலி போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் விரைவில் ஓய்வு பெற்று மற்ற போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.