இரண்டாவது டெஸ்டில் ரன் குவிப்பில் விராட் கோலி உலகச் சாதனை!

0
1653
Viratkohli

உலக கிரிக்கெட்டில் தற்போதைய காலகட்டத்தில் நவீன கிரிக்கெட் ஷாட்கள் எதையும் விளையாடாமல் மரபு வழி கிரிக்கெட் ஷாட்கள் மட்டுமே விளையாடி ஒருவர் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் ரன் சராசரி 50 க்கு மேல் வைத்திருக்கிறார் என்றால் அது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி அந்த அசாதாரண காரியத்தை சாதாரணமாக செய்யக்கூடியவராக உலக கிரிக்கெட்டில் இருக்கிறார்!

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அவர் விளையாடிய 7, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தான் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு சாதனைகளை இந்திய அளவில் அல்லது உலக அளவில் படைத்து கொண்டே இருப்பார். அந்த அளவிற்கு அவரது பேட்டிங் தொடர்ச்சியாக சீராகவும் மேலும் குறிப்பிட்ட ஆட்டத்தில் வியக்கத்தக்க வகையிலும் இருக்கும். தற்பொழுது சச்சினுக்கு பிறகு அப்படி ஒரு ஆட்டக்காரராக விராட் கோலி திகழ்கிறார்!

- Advertisement -

சச்சின் சாதனைகளை இன்னொரு வீரர் எட்டிப் பிடிப்பது என்பது ஆகாத காரியம் என்று கிரிக்கெட் விளையாடிய பல முன்னாள் வீரர்கள் கருதி வந்தார்கள். விராட் கோலி விளையாட வந்து ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கருத்தில் அவர்களுக்கு மாற்றம் உருவானது. அந்த அளவிற்கு விராட் கோலியின் பேட்டில் இருந்து ரன்கள் கொட்ட ஆரம்பித்தது.

இதற்கு நடுவில் 2019 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்திற்கு பிறகு விராட் கோலியின் பேட்டிங்கில் திடீர் சரிவு ஏற்பட அடுத்து மூன்று ஆண்டுகள் அவரால் அந்த எதிர்பாராத சரிவை மாற்ற முடியவில்லை. இதனால் அவரது பல உலக சாதனைகள் தள்ளி தள்ளிப் போயின. இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு சதம் கண்ட பிறகு அவரது பேட்டிங் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது. இதற்குப் பிறகு வழக்கம் போல் மீண்டும் அவரிடம் இருந்து இந்திய மற்றும் உலக சாதனைகள் வர ஆரம்பித்திருக்கின்றன!

தற்பொழுது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை எட்டி இருக்கிறார். இந்த 25 ஆயிரம் ரன்களை மற்றவர்களை விட குறைந்த இன்னிங்சில் எட்டி உலக சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

549- விராட் கோலி
577 – சச்சின் டெண்டுல்கர்
588 – ரிக்கி பாண்டிங்

மேலும் உலக கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் ராகுல் டிராவிட்டுக்கு மேலே இருக்கிறார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் குமார் சங்கக்கரா 28,016 ரன்களுடன் இருக்கிறார்!