தற்போது இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி 22 ரன்களில் வெளியேறி இலங்கை அணிக்கு எதிராக மோசமான சாதனை படைத்திருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி மீண்டும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமான சூழ்நிலையில் ஆரம்பத்தில் காணப்பட்டது. இதை பயன்படுத்தி விளையாடிய இலங்கை அணி சிறப்பான முறையில் ரன்கள் சேர்த்தது.
இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 65 பந்துகளில் 45, அவிஷ்கா பெர்னாடோ 102 பந்துகளில் 96, குசால் மெண்டிஸ் 82 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு248 ரன்கள் எடுத்தது. அறிமுக வீரர் ரியான் பராக் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு வழக்கம் போல ரோகித் சர்மா அதிரடியாக 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணி மிக மோசமான முறையில் விளையாடி 82 ரன்களுக்கு முதல் ஆறு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த போட்டியில் விராட் கோலி 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அதற்குரிய தொழில்நுட்ப ரீதியில் விளையாடாமல், உள்ளே வரும் பந்தை தடுக்காமல் வெளியே வரும் என்று விளையாடி ஆட்டம் இழந்தார். இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் 24, 14, 20 என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.
மேலும் இந்த தொடரில் விராட் கோலியின் ரன் ஆவரேஜ் 19.33. இரண்டு போட்டிகளுக்கு மேல் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விராட் கோலிக்கு 2008 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இதுதான் மிகக் குறைந்த ரன் ஆவரேஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இலங்கை அணிக்கு எதிராக மொத்தமாக 60 ஆவரேஜ் இருக்கிறது. மேலும் 2008 ஆம் ஆண்டு அவர் அறிமுகமாகிய பொழுது இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 31.80 ஆவரேஜ்தான் மிகக்குறைவானதாக இருந்தது.
இதையும் படிங்க : 3 விக்கெட் எடுத்திருக்கேன்.. ஆனா அந்த விஷயம் எனக்கு ஏமாற்றமா இருக்கு – அறிமுக ரியான் பராக் பேட்டி
இந்த போட்டியில் விராட் கோலி விளையாடிய விதம் முற்றிலும் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆடக்கூடிய அளவில் இல்லை. தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மோசமாக இருந்த காரணத்தினால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர்களும் விராட் கோலியின் பேட்டிங் குறித்து விமர்சித்து வருகிறார்கள்.






