முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல் ? காரணம் இதுதான்

0
516
Virat Kohli

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றது. அடுத்து நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது!

இந்த ஒருநாள் போட்டியின் முதல் போட்டி நாளை ஓவலில் துவங்குகிறது. இதற்கடுத்த இரண்டாவது போட்டி ஜூலை 14 மான்ஸ்செஸ்டரிலும், மூன்றாவது போட்டி ஜூலை 17 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

முதலில் நடந்த டி20 தொடரின் முதல் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு இருந்தது. இரண்டாவது போட்டியில் ஒரு ரன், மூன்றாவது போட்டியில் 11 ரன்னும் அடித்தார். இது அவரது இரண்டாவது மோசமான டி20 தொடர் செயல்பாடாகப் பதிந்தது.

மேலும் சமீபக் காலத்தில் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் மிகச் சுமாராகவே இருந்து வருகிறது. அவரால் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் கூட ஆட முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இதனால் விராட் கோலியை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய தேவையில்லை என்று, இந்திய முன்னாள் வீரர்கள் கபில்தேவ், சேவாக் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்ட பொழுது, வெளியில் என்ன பேசுகிறார் என்று பொருட்படுத்த முடியாது, விராட் கோலி ஒரு தசாப்தமாக சிறப்பாக விளையாடியவர். அவரை சில ஆண்டுகள் வைத்துப் பார்க்க முடியாது. பார்ம் வரும் போகும், ஆனால் தரம் நிரந்தரமானது. நாங்கள் விராட் கோலியின் தரத்தை நம்புகிறோம் என்று ஆதரித்துப் பேசியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நாளை மாலை துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி களமிறங்கமாட்டார் என்று பி.சி.சி.ஐ வட்டாரம் தெரிவிக்கிறது. கடைசி டி20 போட்டியின் போதும், பயிற்சியின் போதும் அவருக்கு இடுப்பு பகுதியில் வலி உருவாகியுள்ளது. இது எப்படியான காயம் என்று தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் கடைசி டி20 நடந்த நாட்டிங்ஹாமிலிருந்து முதல் ஒருநாள் போட்டி நடக்கும் ஓவலுக்கு விராட்கோலி அணியின் பேருந்தில் பயணிக்கவில்லை. இடுப்பு வலி தொடர்பாக மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அவர் பழைய பார்ம்க்கு திரும்புவார் என்று காத்திருந்த இரசிகர்களுக்கு இது ஏமாற்றமே!