கிரிக்கெட் உலகின் லெஜன்ட் பேட்ஸ்மேன்களான பிரையன் லாரா மற்றும் ரிச்சர்ட்ஸ் இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் செய்திருக்கும் சாதனைகளை உடைக்க விராட் கோலிக்கு இன்னும் 102 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக வருகின்ற டிசம்பர் ஆறாம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் துவங்குகிறது. இந்த மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியான மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தில் நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெர்த் மைதானத்தில் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் 143 பந்தில் 100 ரன்கள் எடுத்து சதம் அடித்திருந்தார். இது அவருக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 30வது சதமாகவும், ஆஸ்திரேலியா மண்ணில் ஏழாவது டெஸ்ட் சதமாகவும், ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய மண்ணில் பத்தாவது சதமாகவும் பதிவாகியது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் ஒட்டுமொத்தமாக அதிக சதங்கள் எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் அடித்தவர் என்கின்ற சாதனையை விராட் கோலி படைத்தார். மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்தியர் என்ற சாதனையையும், இரண்டாவது வெளிநாட்டவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இன்னும் சதங்கள் வந்தால் இதிலும் முதல் இடத்தை பிடிப்பார்.
இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் அடிலெய்ட் மைதானத்தில் அதிக ரன் எடுத்த வெளிநாட்டு பேட்ஸ்மேனாக பிரையன் லாரா 610 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் இந்தப் பட்டியலில் ரிச்சர்ட்ஸ் 552 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் எங்கள ஸ்லெட்ஜ் பண்ற அளவுக்கு ஆயிடுச்சு.. 2வது டெஸ்டில் பழைய மாதிரி செய்யணும் – மிட்சல் ஜான்சன் கருத்து
பிரையன் லாராவின் இந்த சாதனையை உடைக்க விராட் கோலிக்கு இன்னும் நூத்தி இரண்டு ரன்கள் தேவைப்படுகிறது. விராட் கோலி தற்போது இந்த மைதானத்தில் ஒட்டுமொத்தமாக 509 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு 44 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சாதனைகளையும் விராட் கோலி உடைக்கக்கூடிய ஃபார்மில் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம்!