ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை மீண்டும் நியமிப்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்த நிலையில், அணியை மீண்டும் வழிநடத்த ரோகித் சர்மா தான் சரியான தேர்வாக இருப்பார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “இது மெகா ஆக்ஷன் சைக்கிளின் கடைசி ஆண்டாகும். சரியான அணி காம்பினேஷனை கட்டமைக்க முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போதுமே ஒரு யூனிட்டாக விளையாடவில்லை. பும்ராவுக்கு சில இன்சுரி பிரச்சினைகள் இருந்தன. இதற்கெல்லாம் மேலாக, மெகா ஆக்ஷனுக்கு முந்தைய கடைசி சீசனுக்கு ரோகித் கேப்டனாக இருப்பதும், பொல்லார்ட் ஹெட் கோச் ஆவதும் சரியான காம்பினேஷனாக இருக்கும்” என்று தொடங்கி உள்ளார்”
தொடர்ந்து பேசிய அவர் “அவர்களிடம் இருக்கும் ஸ்குவாடை வைத்து கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் தகுதி பெறாமல் போனது ஆச்சரியமளிக்கிறது. மும்பை அணி ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவிக்க வேண்டும். ஏனென்றால், அணியின் மையப்புள்ளியாகவும், ஒரு குடும்பத்தை பாதுகாக்கும் பெரிய அண்ணனைப் போலவும் இருக்கக்கூடியவர் அவர்தான். எனவே அவர் கேப்டன் ஆனால் அது மும்பை அணிக்கு நல்லதாக அமையும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அஸ்வின் “ரோகித் ஒரு நம்பமுடியாத ஹியூமன் டச் வைத்துள்ளார். அந்த மாதிரி இருப்பது மிகவும் கடினம். உங்கள் அணியில் 20 வீரர்கள் இருந்தால், முதலாவது வீரரை எப்படி பார்க்கிறாரோ அதே போலத்தான் 20வது வீரரையும் நடத்துவார். எக்ஸ் வீரருக்கு அவர் எந்த அளவுக்கு முக்கியத்துவமும் அன்பும் கொடுக்கிறாரோ, அதே அளவை இசட், ஏ, எல் மற்றும் எம் ஆகியோருக்கும் கொடுப்பார். அவர் ஒரு சூப்பரான மனிதர் மற்றும் தந்திரோபாய ரீதியாக புத்திசாலித்தனமான ஒரு இன்ட்ரெடிபிள் லீடர்” என கூறி இருக்கிறார்.