விராட் கோலிக்கும் எம்.ஆர்.எப் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தம் முடிவு – இனி கோஹ்லி பயன்படுத்தவுள்ள புதிய பேட் இதுதான்

0
4201
Virat Kohli MRF Bat Sponsorship

இந்த தலைமுறையில் இந்திய அணி கண்டெடுத்த மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் விராட் கோலி. இந்தியாவில் மூன்று பார்மட்டுகளுக்கும் கேப்டனாக இருந்த கோலி தற்போது அனைத்து விதமான கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். T20 உலகக்கோப்பைக்கு பின்பு சர்வதேச டி20 போட்டியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோலி. அப்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர விருப்பம் தெரிவித்திருந்தார் கோலி.

ஆனால் தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்பு இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். எப்படியும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்தவுடன் அதிலிருந்தும் விலகிவிட்டார். கோலியின் இந்த அடுத்தடுத்த தொடர் விலகல்களால் பிசிசிஐ அமைப்புக்கும் அவருக்கும் ஏதோ பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என்று பலராலும் பேசப்பட்டது. ஆனால் அதை பிசிசிஐ மறுத்துள்ளது.

- Advertisement -

தொடர்ந்து நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளில் வந்துகொண்டே இருக்கும் விராட் கோலி தற்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். இதுவரை எம்.ஆர்.எஃப் நிறுவனத்தை தன்னுடைய பேட்டின் ஸ்பான்சராக வைத்திருந்த கோலி தற்போது வேறு நிறுவனத்துடன் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தற்போது நடந்து கொண்டிருக்கும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்தவுடன் கோலி தன்னுடைய பேட்டின் ஸ்பான்சரை மாற்ற உள்ளதாக தெரியவந்துள்ளது.

கோலிக்கு முன்பு இந்திய அணியின் சிறந்த பேட்டிங் வீரராக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரும் இதே போல எம்.ஆர்.எஃப் நிறுவனத்தை தான் முதலில் தன்னுடைய பேட்டின் ஸ்பான்சராக வைத்திருந்தார். ஆனால் சிறிது காலத்திற்கு பின்பு அடிடாஸ் நிறுவனத்தை தன்னுடைய பேட் ஸ்பான்சராக மாற்றிக் கொண்டார் சச்சின். அதே போல விராட் கோலியும் தற்போது நடக்க இருக்கும் ஒரு நாள் தொடர் முடிந்தவுடன் எம்.ஆர்.எஃப் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு பூமா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளார்.

சமீபகாலமாகவே பேட்டிங்கில் சிறந்த முறையில் பங்கு அளிக்காமல் இருக்கும் விராட் கோலி தற்போது புது ஸ்பான்சரை தன்னுடைய பேட்டுக்கு தேர்வு செய்துள்ளார். இதன் பின்பு அதிகமாக ரன்கள் குவிக்கும் பழைய விராட்கோலி ஆக மாறி சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

- Advertisement -