யாரும் அசைக்க முடியாத 19 வருட சச்சினின் உலக சாதனை.. முறியடிக்க போகும் விராட் கோலி

0
2263

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகள் ஒரு நாள் போட்டி தொடர் மட்டும் டி20 போட்டி தொடர்களில் விளையாட இருக்கிறது.

நடந்து முடிந்த இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை 1 இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் டிராவில் முடிவடைந்தது .

- Advertisement -

நடந்து முடிந்த இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால்,ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் எடுத்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா சதம் அடித்தனர் . இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் எடுத்தார் . இதன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் வெளிநாட்டு மண்ணில் சதம் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா லாக்டவுன்க்கு பிறகு தனது பார்மில் சுதப்பி வந்த விராட் கோலி கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளின் மூலம் மீண்டும் ஆரம்பித்து வந்தார் . ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டியில் சதம் எடுத்தவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் சதம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக இரண்டு சதங்களை அடித்த அவர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 186 ரன்கள் எடுத்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 121 ரன்கள் எடுத்திருக்கிறார் .

உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் விராட் கோலியின் பார்ம் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது அவர் மீண்டும் பார்மிற்கு வந்திருப்பது இந்திய அணிக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. மேலும் நடைபெற இருக்கின்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 19 வருட கால சாதனையை முறியடிக்க இருக்கிறார் விராட் கோலி. அதுவும் சச்சினை விட மிக அதிக வேகமாக அந்த சாதனையை முறியடிக்க போகிறார் என்பது தான் ஹைலைட்.

- Advertisement -

தற்போது ஒரு நாள் போட்டிகளில் 13,000 ரன்களை மிகவும் விரைவாக ஏற்றிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 321 வது இன்னிங்ஸில் 13000 ரன்களை எட்டி அதிவேகமாக 13,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் 2004 ஆம் ஆண்டு ராவல் பண்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் படைத்தார் . சச்சினுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 341 இன்னிங்ஸ்களில் 13000 ரன்களை கடந்து இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் குமார் சங்கக்கார 363 இன்னிங்ஸ்களிலும் அவரைத் தொடர்ந்து சனத் ஜெயசூர்யா 416 இன்னிங்ஸ்களிலும் 13,000 ரன்களை கடந்து இருக்கின்றனர்.

தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 265 இன்னிங்ஸ்களில் விளையாடி 12,898 ரன்களை எடுத்திருக்கிறார். அவருக்கு 13,000 ரன்களை எட்ட இன்னும் 102 ரன்கள் தேவைப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்தத் தொடரிலேயே விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்துவார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். விராட் கோலி 13,000 ரன்கள் எட்டினால் 300க்கும் குறைவான இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 13,000 ரன்கள் எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் அடைவார்.