நான் எந்த பவுலரை அடிக்க வேண்டும் என்று விராட் கோலிதான் திட்டம் போட்டுக் கொடுத்தார் – இரட்டை சத நாயகன் இசான் கிசான் பேட்டி!

0
11009
Ishankishan

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இன்று ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை முதல் இரண்டு ஆட்டங்களை வென்று பங்களாதேஷ் அணி கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது!

இந்த நிலையில் இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பீல்டிங் செய்ய முடிவு எடுக்க, இந்திய அணிக்கு துவக்கம் தர சிகர் தவான் மற்றும் இசான் கிசான் இருவரும் களமிறங்கினார்கள். இந்த தொடரில் சரியாக விளையாடாத தவன் இந்த முறையும் ஏமாற்றினார்.

- Advertisement -

ஆனால் இந்த தொடரில் முதல் வாய்ப்பை பெற்ற இசான் கிசான் 131 பந்துகளில் 210 ரன்களை 24 பௌண்டரி மற்றும் 10 சிக்ஸர்களுடன் வெளுத்து கட்டினார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்தவர், ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற இரண்டு உலகச் சாதனைகளைப் படைத்தார். இவருடன் நின்று இவருக்கு பக்கபலமாக விளையாடிய விராட் கோலியும் சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்கள் குவித்துள்ளது!

இந்திய அணி பேட்டிங் செய்து முடித்த பிறகு தன்னுடைய பேட்டிங் இன்னிங்ஸ் பற்றி பேசிய இசான் கிசான் ” ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நல்ல வசதியாக இருந்தது. எனது திட்டமும் நோக்கமும் தெளிவாக இருந்தது. இரட்டை சதம் அடித்த பெரிய ஜாம்பவான்கள் பட்டியலில் என் பெயரும் இணைந்து இருப்பதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பாக்கியசாலி. என்னால் இன்று 300 ரன்களையும் அடித்திருக்க முடியும். நான் 15 ஓவர்கள் மீதம் இருக்கும் பொழுதே ஆட்டம் இழந்து விட்டேன் ” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “எந்தெந்த பந்துவீச்சாளர்களை நான் தாக்கி ஆட வேண்டும் என்பதை விராட் கோலி கவனித்துக் கொண்டார். நான் 95 ரன்கள் இருந்த பொழுது, சிக்ஸர் அடித்து சதம் அடிக்க நினைத்தேன். ஆனால் விராட் கோலி என்னை அமைதிப்படுத்தி சிங்கள்கள் மூலம் சதத்தை அடிக்க வைத்தார். அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார். அவரிடம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் மிகவும் புத்திசாலி. விராட் பாயுடன் இணைந்து பேட்டிங் செய்வதை நான் மிகவும் ரசிக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.

- Advertisement -