பழைய நண்பேன்டா விராட் கோலி-ரோகித் சர்மா ; வீடியோ இணைப்பு!

0
3796
Virat Rohit

3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையே இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று, தொடர் சமநிலையில் இருக்க, இன்று தொடரை நிர்ணயிக்கும் தொடரின் கடைசி மற்றும் 3வது போட்டி ஐதராபாத் நகரில் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்று தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் தர வந்த கேப்டன் ஆரோன் பின்ச் சீக்கிரத்தில் ஆட்டமிழந்தார். அவரை அக்ஷர் படேல் வெளியேற்றினார். இதையடுத்து களத்தில் நின்ற இளம் வீரர் கேமரூன் கிரின் மைதானத்தில் சூறாவளி போல சுழன்று அடித்து இந்திய பந்துவீச்சை நாசம் செய்து விட்டார். வெறும் இருபத்தி ஒரு பந்துகளை சந்தித்த அவர் 52 ரன்களை குவித்து அசத்தினார். 19 பந்துகளில் அரைசதம் அடித்து இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

இதற்கடுத்து இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் இறுதி நேரத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் டிம் டேவிட் 27 பந்துகளில் 54 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 186 ரன்கள் சேர்த்தது.

இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்தார்கள். இதன் பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு பதிலடி தந்தார்கள். சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இறுதி ஓவர் வரை களத்தில் நின்ற விராட்கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதையடுத்து இந்திய அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இந்த ஆட்டம் எளிமையாக இந்திய அணி முடித்து வைக்கும் என்கிற போக்கில் தான் நகர்ந்தது. ஆனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, அந்த கடைசி ஓவரை டேனியல் சாம்ஸ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை அபாரமாக சிக்சர் அடித்த விராட் கோலி அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார். இதையடுத்து மூன்று பந்துகளுக்கு நான்கு ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இந்த நேரத்தில் கடைசி ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்ட ஹர்த்திக் பாண்டிய அதைத் தவற விட்டார்.இதனால் கடைசி இரண்டு பந்துகளுக்கு நான்கு ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

- Advertisement -

இந்த சமயத்தில் ஆட்டமிழந்து சென்ற விராட் கோலியை கட்டித்தழுவி கீழே வந்து வரவேற்ற ரோகித் சர்மா படிக்கட்டில் அமர்ந்து கொண்டார். அவருடன் சேர்ந்து விராட் கோலியும் அமர்ந்துகொண்டார். அப்போது கடைசி ஓவரின் 5-வது பந்தை ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்ததும், விராட் கோலி ரோஹித் சர்மாவிடம் தனது வெற்றி மகிழ்ச்சியை தட்டிக்கொடுத்து கட்டிப்பிடித்து வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரது செயல்பாட்டையும் பார்க்கும் பொழுது, பழைய விராட் கோலி ரோகித் சர்மாவின் நட்பை பார்ப்பதுபோல் இருந்தது. இதற்கான வீடியோ லிங்க் கீழே உள்ளது.