கேலிகளுக்கும் வெறுப்புகளுக்கும் விஜய் சங்கர் பதில் சொல்லி இருக்கிறார் – அபினவ் முகுந்த் பரபரப்பு ட்வீட் இணைப்பு!

0
195
Abinav

ஐபிஎல் 16ஆவது சீசனில் டபுள் ஹெட்டரின் முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக பலப்பரிட்சை நடத்தி வருகிறது!

இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட வில்லை. அவருக்குப் பதிலாக ரசித் கான் கேப்டனாக வந்து டாசை வென்று முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சகா 17 ரன்னிலும், கில் 39 ரன்னிலும் சுனில் நரைன் பந்தில் ஆட்டம் இழந்தார்கள். மூன்றாவது விக்கட்டுக்கு வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன், இந்த ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தைப் பதிவு செய்து 53 ரன்னில் ஆட்டம் இழந்தார். அபினவ் மனோகர் 14 ரன்கள் எடுத்தார்.

இந்த முறை நான்காவது விக்கெட்டுக்கு பதிலாக ஐந்தாவது விக்கெட்டுக்கு வந்த மற்றுமொரு தமிழக வீரர் விஜய் சங்கர் ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை காட்டினார். பின்பு மெதுவாக ரன் வேகத்தைக் கூட்டினார்.

குறிப்பாக சாய் சுதர்சன் ஆட்டம் இழந்ததும் விஜய் சங்கரின் ஆட்டத்தில் வேகம் அதிகரித்தது. கடைசி இரண்டு ஓவரில் மட்டும் ஐந்து சிக்ஸர்கள் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டு அசத்தினார். இதில் சர்துல் தாக்கூர் வீசிய இருபதாவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அவரிடம் இருந்து பறந்தன.

- Advertisement -

சமீபக் காலத்தில் பெரிய பேட்டிங் செயல்பாடு எதுவும் இல்லாததால் ஐபிஎல் தொடரில் கூட இவருக்கு வரவேற்பு மிகக் குறைவாக இருந்தது. இந்திய அணிக்குள் நுழைவது என்பது இவர் நினைத்தே பார்க்க முடியாத கனவாக இருந்தது. கடந்த வருடம் குஜராத் அணியிலும் இவரது செயல்பாடு சிறப்பாக இல்லை.

இந்த நிலையில் இந்த முறை தொடர்ந்து மூன்று ஆட்டங்களிலும் குஜராத் அணி இவருக்கு வாய்ப்பு வழங்கியது. முதல் இரண்டு ஆட்டங்களில் மோசமில்லாத சராசரியான பங்களிப்பை வழங்கிய இவர், இந்த ஆட்டத்தில் தனது இன்னொரு அதிரடி முகத்தைக் காட்டி அசத்தியிருக்கிறார். தனது அரை சதத்தை இவர் 21 பந்தில் எட்ட, அது குஜராத் அணிக்கான அதிவேக அரை சதமாக பதிவாகியது. மேலும் குஜராத் அணி தற்பொழுது எடுத்துள்ள 204 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இவரது மறுபிரவேசத்தைக் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக வீரர் அபினவ் முகுந்த் ” விஜய் சங்கர் குறித்தான கேலிகளுக்கும் வெறுப்புகளுக்கும் அவர் மீண்டு வந்து இந்த இன்னிங்ஸ் மூலம் பதில் சொல்லி இருக்கிறார். இந்த வருடம் ரஞ்சி தொடரிலும் திரும்ப வந்து மூன்று சதங்கள் அடித்து இருக்கிறார்!” என்று ட்விட் செய்திருக்கிறார்.

தனது இந்த இன்னிங்ஸ் குறித்து பேசி உள்ள விஜய் சங்கர் ” நான் உலகக் கோப்பையில் விளையாடிய பொழுது காயமடைந்தேன். அந்தச் சூழ்நிலை கடினமானது. நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், நாட்டிற்காக விளையாடுவது தானாகவே நடக்கும்!” என்று கூறியிருக்கிறார்!