41 வயது ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு.. உருக்கமான அறிக்கை.. லார்ட்ஸில் நடக்க இருக்கும் நிகழ்வு

0
1009
Anderson

நடப்பு கிரிக்கெட் உலகில் 41வது வயதில் வேகப் பந்துவீச்சாளராக சர்வதேச கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டு வரும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். மேலும் தன்னுடைய அறிக்கையில் உருக்கமான முறையில் பேசி இருக்கிறார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 2002 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். அடுத்த வருடம் 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டிலும், 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் 187 போட்டிகளில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்கின்ற அரிய சாதனையை நிகழ்த்தினார். 194 ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அதே சமயத்தில் 296 முதல்தர போட்டிகளில் 1,114 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் ஜூலை மாதம் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார். தன்னுடைய 42 வது வயது துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்னுடைய ஓய்வு அறிக்கையில் ” அனைவருக்கும் வணக்கம்! லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட்தான் என்னுடைய கடைசி டெஸ்ட் என்று சொல்லிக் கொள்கிறேன். நான் சிறுவயதிலிருந்தே விரும்பிய விளையாட்டை என் நாட்டிற்காக 20 வருடங்கள் பிரதிநிதித்துவப்படுத்தியது நம்ப முடியாதது. நான் இங்கிலாந்துக்காக விளையாடுவதை இழக்கப் போகிறேன். நான் அடைந்ததைப் போலவே மற்றவர்களும் கனவுகளை நனவாக்குவதற்கு சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இதில் பெரிய உணர்வுகள் வேறு ஏதும் இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரே டீம்.. ஆனா ஸ்டப்ஸ்க்கு வலையில் பந்து வீச மறுக்கும் குல்தீப்.. கிரேட்டான காரணம்

என் குடும்பத்தார் மற்றும் பெற்றோர்கள் இல்லாமல் இதை சாத்தியப்படுத்தி இருக்க முடியாது. மேலும் இதை சிறந்த பணியாக மாற்றிய பயிற்சியாளர்கள் மற்றும் உடன் விளையாடிய வீரர்களுக்கும் நன்றி. வரவிருக்கும் புதிய சவால்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். கோல்ப் விளையாடி மிச்ச நாட்களை நிரப்ப இருக்கின்றேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி, என் முகத்தை இனி அடிக்கடி காட்ட முடியாவிட்டாலும், அது அர்த்தமுள்ளதாகவே இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.