விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில், ஒடிசா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்வஸ்திக் சமல் சௌராஷ்டிராவுக்கு எதிராக 212 ரன்கள் குவித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை சதம் அடித்தார். இது ஏ லிஸ்ட் கிரிக்கெட்டில் ஒடிசாவின் முதல் இரட்டை சதமாகும். மேலும், விஜய் ஹஸாரே கோப்பையின் ஐந்தாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும்.
இவரது ஆட்டத்தால் ஒடிசா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் எடுத்தது.சமல் அடித்த இந்த 212 ரன்கள், 2019-ஆம் ஆண்டு மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜார்க்கண்டிற்கு எதிராக அடித்த 203 ரன்களை முறியடித்திருக்கிறது. சௌராஷ்டிராவுக்கு எதிரான அவரது இந்த மிரட்டலான ஆட்டம், அணிக்கு மிகப்பெரிய வலு சேர்த்தது.
இருப்பினும், 2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் சமல் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசா அணிக்கு சமல் வலுவான தொடக்கத்தை அளித்தபோதும், ஓம் டி முண்டே, சந்தீப் பட்நாயக், கோவிந்த் போடார் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 12-வது ஓவரில் 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியது.
பின்னர் களமிறங்கிய கேப்டன் பிப்லப் சமந்தராயுடன் இணைந்து சமல் 261 ரன்கள் கொண்ட பிரமாண்ட பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். அன்கூர் பன்வார் வீசிய பந்தில் சமந்தராய் ஆட்டமிழக்கும் வரை நீடித்த இந்தக் பார்ட்னர்ஷிப் , 345/6 என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.சமல் தனது 212 ரன்கள் ஆட்டத்தில் 21 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசினார். தனது 14-வது ஏ லிஸ்ட் போட்டியில் விளையாடிய அவர், இந்த இரட்டை சதம் மூலம் பட்டியல் A கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 14-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
விஜய் ஹசாரே கோப்பையின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்கள் பட்டியல்: நாராயண் ஜெகதீசன் 277* பிரித்வி ஷா 227* , ருதுராஜ் கெய்க்வாட் 220* , சஞ்சு சாம்சன் 212* . தற்போது ஸ்வஸ்திக் சமல் சௌராஷ்டிராவுக்கு எதிராக 212 ரன்கள் குவித்து இதில் இணைந்துள்ளார்.25 வயதான ஸ்வஸ்திக் சமல், பிப்ரவரி 2019 இல் மிசோரம் அணிக்கு எதிராக தனது டி20 அறிமுகத்தில் டக் அவுட்டானார். தற்போது அவர் 13 டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 160.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 362 ரன்கள் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: விராட் கோலி 101 பந்துகளில் 131 ரன்கள் குவிப்பு.. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சச்சினின் உலக சாதனை முறியடிப்பு
அக்டோபர் 2019 இல் ஹரியானாவுக்கு எதிராக பட்டியல் A கிரிக்கெட்டில் அறிமுகமான சமல், அந்த போட்டியில் 12 ரன்கள் எடுத்தார். சௌராஷ்டிராவுக்கு எதிரான இந்தப் ஆட்டத்திற்கு முன், அவர் 10 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 309 ரன்கள் எடுத்திருந்தார்.
டிசம்பர் 2022 இல் ஹரியானாவுக்கு எதிராக முதல் தர டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சமல், அங்கு ஒரே இன்னிங்ஸில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அவர் தற்போது 12 முதல் தரப் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் மொத்தம் 686 ரன்கள் குவித்துள்ளார்.