இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், இன்றைய நவீன கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் எவ்வாறு ஆட்டத்தின் போக்கை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது குறித்துப் பேசி இருக்கிறார்.
நவீன கிரிக்கெட்டில் பிட்ச் தன்மைகள் மற்றும் சிறிய பவுண்டரிகள் அனைத்தும் பேட்டர்களுக்கு சாதகமாக இருப்பதாகப் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பந்துவீச்சாளர் வீசும் பந்தின் அடிப்படையில்தான் பேட்டர் தனது ஷாட்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
தற்போதைய கிரிக்கெட் சூழலில் விதிமுறைகளும் மைதானங்களும் பேட்டர்களுக்கு முழுமையான சாதகங்களை வழங்கினாலும், போட்டியைத் தன்வசப்படுத்தும் முழு பலமும் பந்துவீச்சாளரிடம்தான் இருப்பதாகக் கூறலாம்.
இதுகுறித்து புவனேஷ்வர் குமார் பேசும்போது “இது விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கேள்விதான். இப்போது சூழ்நிலைகள் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்றெல்லாம் நாம் பேசுகிறோம், ஆனாலும் ஒரு பந்துவீச்சாளரால் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன். பந்தை பேட்டருக்கு நாம் வீசுவதுதான் அதற்குக் காரணம். நாம் பேசும் எர்ரர் மார்ஜின் மிகக் குறைவுதான் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், ஒரு பந்துவீச்சாளர் தான் எங்கு விரும்புகிறாரோ அங்கு பந்தைக் கொண்டு போய் வீச முடியும். ஒரு பந்துவீச்சாளரால் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நான் வலுவாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் “சின்னப் பவுண்டரிகள் இருக்கின்றன. எல்லாமே பேட்டர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனாலும், பேட்டருக்குப் பந்தை வீசுபவர் ஒரு பந்துவீச்சாளர்தான். அதன்பிறகு பந்திற்கு ஏற்ப விளையாட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது பேட்டரின் விருப்பம். ஆனால், நீங்கள் நல்ல பந்துவீச்சாளர்களைப் பார்த்தால், அவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் கன்சிஸ்டண்டாக இருக்கிறார்கள். ஆட்டம் சமமாக இல்லாவிட்டாலும், பந்துவீச்சாளர் மிக வேகமாகத் தன்னை மாற்றிக் கொள்கிறார்” என்று கூறி இருக்கிறார்.