இன்று கிரிக்கெட் உலகில் இரண்டு மிகப்பெரிய டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒரு போட்டியில் மதியம் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் செஞ்சுரியன் மைதானத்தில் விளையாட இருக்கின்றன.
இன்னொரு போட்டியில் அதிகாலை முதல் மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. பாக்ஸிங் டே டெஸ்ட் என்பதால் ரசிகர்களின் ஆரவாரத்தில், போட்டிக்கு புது வண்ணம் கிடைக்கிறது!
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருக்க, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டாஸில் பாகிஸ்தான் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் கடந்த போட்டியில் இருந்து எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் தரப்பில் முகமது ரிஸ்வான், ஹசன் அலி மற்றும் மிர் ஹம்சா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு வழக்கம் போல் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவஜா இருவரும் துவக்கம் தருவதற்காக வந்தார்கள். இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அவ்வளவு சுலபத்தில் ரன்களை கொடுக்கவில்லை. பந்துவீச்சை மிகச் சரியான முறையில் அமைத்து நல்ல அழுத்தம் கொடுத்தது.
இந்த நிலையில் ஆரம்பத்திலேயே 11 பந்தில் 2 ரன்கள் டேவிட் வார்னர் எடுத்திருந்தபொழுது, ஷாகின் அப்ரிடி பந்தில் எட்ஜ் எடுத்து, பந்து அப்துல்லா ஷபிக் கைகளுக்கு அழகாகச் சென்றது. அந்தப் பந்தை கடைசி வினாடியில், பிடிக்காமல் அப்துல்லா ஷபிக் தவறவிட, மொத்த மைதானமும் ஆச்சரியத்தில் கூச்சலிட்டது.
இதற்குப் பிறகு நிலைத்து நின்ற துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆகா சல்மான் பந்துவீச்சில் பாபர் அசாம் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து இன்னொரு துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா ஹசன் அலி பந்துவீச்சில் ஆகா சல்மானிடம் கேட்ச் கொடுத்து 42 ரன்களில் வெளியேறினார்.
ஆஸ்திரேலியா அணி தற்போது 2.67 ரன்ரேட்டில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 42.4 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்திருக்கிறது. மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த போட்டியிலும் டேவிட் வார்னர் கொடுத்த கேட்ச்சை பிடிக்காமல் இதே அப்துல்லா ஷபிக் தவறவிட, டேவிட் வார்னர் பெரிய இன்னிங்ஸ் விளையாட ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்றும் அப்படியே ஆரம்பித்திருக்கிறது!
David Warner gets a life on two! Shaheen Afridi gets the ball swinging and Abdullah Shafique puts it down at first slip #AUSvPAK pic.twitter.com/EJc4AptxJk
— cricket.com.au (@cricketcomau) December 25, 2023