வீடியோ.. W W W 4 W.. 4 ரன்னுக்கு 5 விக்கெட்.. சிராஜ் உலக சாதனை.. ஆசியக் கோப்பை பைனலில் இலங்கை திணறல்!

0
5138
Siraj

இன்று ஆசியக் கோப்பையில் இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் தற்பொழுது கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை கேப்டன் முதலில் தமது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு எவ்வளவு தவறானது என்று அடுத்த நான்கு ஓவர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் காட்டினார்கள்.

- Advertisement -

இலங்கை அணியில் காயமடைந்த மதிஷ தீக்ஷனாவுக்கு பதிலாக ஹேமந்த் துஷாரா இடம்பெற்றார். இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்ட ஐந்து வீரர்கள் திரும்பி வந்தார்கள். காயமடைந்த அக்சர் இடத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதற்கு அடுத்து இலங்கைக்கு குசால் பெரேரா மற்றும் பதும் நிஷாங்கா இருவரும் துவக்கமளிக்க காலத்திற்கு வந்தார்கள். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் பும்ரா குசால் பெரேரா வீழ்த்தி ஆரம்பித்து வைத்தார்.

இதற்கு அடுத்து இரண்டு ஓவர்கள் மிகவும் பொறுமையாக சென்றது. நான்காவது ஓவரை வீச முகமது சிராஜ் திரும்ப வந்தார். இந்த ஒரே ஓவரில் இலங்கை அணியின் ஆசிய சாம்பியன் கனவு அங்கேயே நசுங்கிப் போனது.

- Advertisement -

முகமது சிராஜ் அந்த ஓவரின் முதல் பந்தில் பதும் நிஷாங்காவை வெளியேற்றினார். இதற்கு அடுத்து ஒரு பந்து விட்டு அடுத்த பந்தில் சமரவிக்கிரமாவை வீழ்த்தினார். இதற்கு அடுத்த பந்தில் அசலங்காவை உடனே அனுப்பி வைத்தார். அடுத்து வந்த தனஞ்செயாவுக்கு ஒரு பவுண்டரி கொடுத்து அவரையும் அடுத்த பந்தில் வீழ்த்தினார்.

முகமது சிராஜ் தான் வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் இலங்கையின் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதற்கு அடுத்து கேப்டன் சனக விளையாட வந்தார். ஐந்தாவது ஓவரை பும்ரா வீசி முடித்தார்.

இதற்கு அடுத்து தனது மூன்றாவது மற்றும் ஆட்டத்தின் ஆறாவது ஓவரை வீச வந்த முகமது சிராஜ் பந்தை காற்றில் அலையவிட்டு வித்தை காட்டினார். அதே ஓவரில் கேப்டன் சனகாவை அற்புதமான பந்தில் கிளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார்.

தற்பொழுது இலங்கை அணி 20 ரன்களை எட்டுவதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதில் முகமது சிராஜ் தற்பொழுது வரை மூன்று ஓவர்கள் பந்து வீசி ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

இதன்மூலம், சமிந்தா வாஸ் தன்னுடைய முதல் 16 பந்துகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி படைத்திருந்த உலகச் சாதனையை முகமது சிராஜ் சமன் செய்து சாதனை படைத்திருக்கிறார்!