“வீடியோ; என்னை பத்தி சோசியல் மீடியாவுல போஸ்ட் போடறதுக்கு பதிலா மெசேஜ் பண்ணுங்க” – முன்னாள் வீரர்கள் மீது ரியான் பராக் அதிரடி கருத்து!

0
196
Riyan parag

ஐபிஎல் கிரிக்கெட்டில் சர்வதேச வீரர்களின் சர்ச்சையான சம்பவங்களும், அவர்களுக்கு கிடைக்கும் கவனத்திற்கும் சமமாக, உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் ஒரு இளைய வீரருக்கு கிடைக்கும் என்றால், அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகத் தொடர்ச்சியாக விளையாடி வரும் ரியான் பராக்குக்கே கிடைக்கிறது!

அவர் பெரிய அளவில் ஐபிஎல் தொடரில் பந்துவீச்சு மற்றும் பேட்டி என்று ஜொலிக்கவிட்டாலும் அவருக்கு தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எதன் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை ஐபிஎல் நடக்கும் நேரத்தில் கேலியாக பதிவிட்டு வந்தார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் அவர் எல்லைக்கோட்டுக்கு அருகே மிக அனாயசமாக எவ்வளவு பெரிய சிக்கலான கேட்ச்சையும் பிடிக்கும் விதமும், அதற்கு அவர் மிக அலட்சியமாக வெளிப்படுத்தும் கொண்டாட்டமும், அவர் மீது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதேபோல ஐபிஎல் தொடரில் மூத்த வீரர் ஹர்ஷல் படேல் உடன் ஏற்பட்ட உரசல், ஐபிஎல் தொடருக்கு முன்பு சிக்ஸர்கள் அடிப்பது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள், பின்பு அவர் பேட்டிங்கில் ஜொலிக்காமல் போனதால் ஏற்பட்ட கேலிகள் என ஐபிஎல் தொடரின் ஒரு ஓரத்தில், இவர் குறித்த பேச்சு வார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ரியான் பராக் தன்னை விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள் பற்றி மிகக் காட்டமான கருத்து ஒன்றை பேசியிருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.

- Advertisement -

அந்த வீடியோவில் ரியான் பராக் பேசும் பொழுது ” மக்கள் தாங்கள் உழைத்து விளையாடிய பணத்தில் நாங்கள் விளையாடுவதை பார்க்க வருகிறார்கள். அதனால் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள். எனக்கு இது முற்றிலும் புரிகிறது.

ஆனால் சில சமூக வலைதள கணக்குகளில் சில முன்னாள் வீரர்கள் மக்கள் போலவே என்னை பற்றி பதிவுகள் இடுகிறார்கள். அவர்கள் எனக்காக நேரம் செலவு செய்து பதிவுகள் இடுவதற்கு பதிலாக, அவர்கள் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். நான் அதை நேர்மையாக விரும்புகிறேன் ” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடு பெரிதாக இல்லாவிட்டாலும், தமது மாநில அசாம் அணிக்காக அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சீரான அளவில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் தொடர்ந்து செயல்பட்டு கொண்டுதான் வருகிறார். மேலும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியிலும் இவர் இடம்பிடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.