வீடியோ.. கான்வோ அதிரடி.. சாம்ஸ் கலக்கல்.. சூப்பர் கிங்ஸ் டெக்ஸாஸ் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை வீழ்த்தியது!

0
503
Mlc2023

இந்தியாவில் 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 லீக் தொடர் போல, தற்பொழுது அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளை வாங்கி உள்ள அணி உரிமையாளர்கள், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளில் நான்கு அணிகளை வாங்கியுள்ளார்கள்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி எல் கிளாசிகோ எனப்படும். தற்பொழுது அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட் தொடரிலும் அணிகளை வாங்கியுள்ளதால், இந்த இரு அணிகளும் மோதும் போட்டி அங்கும் நடைபெறுகிறது.

பாப் டூ பிளசிஸ் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஆகவும், கீரன் பொல்லார்டு மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார்கள். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் பாப் தமது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

துவக்க வீரர்களாக டெவொன் கான்வே மற்றும் கேப்டன் பாப் இருவரும் வந்தார்கள். பாப் 8 ரன்களில் வெளியேறினார். இதற்கு அடுத்து கோடி ஷெட்டி 12, டேவிட் மில்லர் 17, டுவைன் பிராவோ 5, டேனியல் சாம்ஸ் 1, மிலிந்த் குமார் 1* ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய டொவோன் கான்வே 55 பந்துகளில் 8 பவுன்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 74 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஐந்தாவது பேட்ஸ்மேனாக விளையாட வந்த சுழற் பந்துவீச்சாளர் மிட்சல் சான்ட்னர் 13 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்ஸர்கள் உடன் 27 ரன்கள் அதிரடியாக குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. டிரெண்ட் போல்ட், ரபாடா இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சயான் ஜஹாங்கீர் 38 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் உடன் 41 ரன்கள் எடுத்தார். மோனக் படேல் 0,
ஸ்டீபன் டைலர் 15, நிக்கோலஸ் பூரன் 19, கீரன் பொல்லார்ட் 0, ஹம்மத் அசம் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இந்த நிலையில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 32 ரன்கள் தேவைப்பட்டபோது 19 வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரை அவர் கட்டுக்கோப்பாக வீச கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை டேனியல் சாம்ஸ் வீச வந்தார். அதுவரை அச்சுறுத்திக் கொண்டிருந்த டிம் டேவிட் விக்கெட்டை கேப்டன் பாப் பிடித்த அபாரமான கேட்ச் மூலம் வீழ்த்தினார். டிம் டேவிட் 24 ரன்கள் உடன் வெளியேறினார். அதற்கு அடுத்த பந்தில் ரபடா விக்கட்டையும் வீழ்த்தினார். இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த போல்ட் ஒரு பந்தை வீணடித்து அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். இந்த இடத்திலேயே மும்பை அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியால் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சூப்பர் கிங்ஸ் டெக்ஸாஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை வீழ்த்தியது. சூப்பர் கிங்ஸ் டெக்ஸாஸ் தரப்பில் டேனியல் சம்ஸ் மற்றும் முகமது மோசின் இருவரும் தல இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.