வீடியோ.. சர்ச்சை.. பேட் உள்ளே இருந்தும் ஏன் அவுட் கொடுக்கப்பட்டது?.. ரூல்ஸ் என்ன சொல்கிறது?

0
2995
Hardikpandya

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றி தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது!

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 114 ரன்களுக்கு சுருட்டியது. குல்தீப் நான்கு, ஜடேஜா மூன்று என விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 22 ஓவர்களில் இலக்கை எட்டி மிக எளிதாக வென்றது. இஷான் கிஷான் கிடைத்த வாய்ப்பில் அரை சதம் அடித்து தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நியாயப்படுத்தி இருந்தார்.

மேலும் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறைந்த ரன்களில் சுருண்டதால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய வரவில்லை. இஷான் கிஷான் துவக்க வீரராக அனுப்பப்பட்டு, அடுத்து சூரியகுமார் யாதவ் அடுத்து ஹர்திக் பாண்டியா அடுத்து ஜடேஜா என அனுப்பப்பட்டார்கள்.

இதில் சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழந்ததும் பேட்டிங்கில் நான்காவது இடத்தில் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அவர் ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பே கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரண்டன் கிங் தவற விட்டார்.

- Advertisement -

இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுழற் பந்துவீச்சாளர் வீசிய பந்தை இசான் கிஷான் நேராக அடிக்க, காற்றில் இருந்த பந்தை வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் பிடிக்க முயற்சிக்க, பந்து அவரது கையில் பட்டு நழுவி ஆனால் பந்துவீச்சு முனையில் இருந்த ஸ்டெம்ப்பை தாக்கியது.

இதைச் சற்றும் எதிர்பாராத பந்துவீச்சாளர் முனையில் நின்ற ஹர்திக் பாண்டியா சுதாரித்து கிரீசுக்குள் செல்வதற்கு முயன்றார். இதற்குள் பந்து ஸ்டெம்பை தாக்கி இருக்க, மூன்றாவது நடுவரிடம் தீர்ப்புக்கு செல்லப்பட்டது. மூன்றாவது நடுவரும் அவுட் என தீர்ப்பளித்தார். ஆனால் தற்பொழுது இதுதான் சர்ச்சையாகி இருக்கிறது.

ஆரம்பத்தில் ரன் அவுட்டுக்கு வகுக்கப்பட்ட விதியில் பேட்ஸ்மேன் அல்லது பேட் கிரீஸ்க்குள் நுழைந்தாலும், ஸ்டெம்ப்பை பந்து தாக்கும் பொழுது பேட் அல்லது பேட்ஸ்மேன் இருவரும் காற்றில் இருக்கக் கூடாது. ரன் அவுட் நிகழ்வு நடந்து முடியும் வரை பேட்ஸ்மேன் அல்லது பேட் இரண்டில் ஒன்றாவது கிரீசுக்குள் இருக்க வேண்டும்.

ஆனால் திருத்தப்பட்ட ரன் அவுட் தொடர்பான விதியில், ரன் அவுட்டுக்கு பேட் அல்லது பேட்ஸ்மேன் கிரீசை தாண்டி தரையைத் தொட்டு உள்ளே நுழைந்து விட்டால், அதற்குப் பிறகு பேட்ஸ்மேன் அல்லது பேட் காற்றில் இருப்பது பிரச்சனை கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று ஹர்திக் பாண்டியா கிரீசுக்குள் ஆரம்பத்தில் பேட்டை கொண்டு வருவதாகவும், பின்பு பேட் காற்றில் இருக்க, பந்து ஸ்டெம்ப்பை தாக்க, அதற்காக அவுட் கொடுக்கப்பட்டதாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது.

ஆனால் நேற்று ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டை தரையில் வைத்து கிரீசை முழுமையாக தாண்டவில்லை. அதாவது கிரீசை பேட்டால் தொட்டால் போதாது தாண்ட வேண்டும் என்பதுதான் விதி. இப்படி ஹர்திக் பாண்டியா கிரீசை தரையில் பேட்டை வைத்து தாண்டாத காரணத்தினால், அவரது பேட் கிரீசை தொட்டிருந்தாலும், அதற்குப் பிறகு பேட் காற்றில் இருந்த காரணத்தால் அவுட் கொடுக்கப்பட்டிருக்கிறது.