வீடியோ.. 6,6,6.. ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷிவம் துபே.. குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்

0
270
Shivam

ஐபிஎல் தொடரை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்று ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. யாருடைய எதிர்பார்ப்பிலும் இல்லாத வீரர்களை வாங்கி, அவர்களுடைய தனிப்பட்ட திறமை எதுவோ, அதை மெருகேற்றி விளையாட வைப்பார்கள். இல்லையென்றால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் கொடுத்து செய்ய வைப்பார்கள்.

இதன் காரணமாக சென்னை அணிக்கு எந்த வீரர்கள் சென்றாலும் பெரும்பாலும் அவர்கள் மற்ற அணிகளில் விளையாடியதை விட மிக நன்றாக விளையாடுவார்கள். வீரர்களை புரிந்து அவர்களுக்கு ஏற்றதை கொடுத்து, மிகக்குறிப்பாக முழு சுதந்திரத்தையும் கொடுத்து, திறமையை வெளியே கொண்டு வருவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்பொழுதும் முன்னணியில் இருக்கக்கூடிய அணி.

- Advertisement -

இந்த வகையில் ஹர்திக் பாண்டியா ஆரம்ப காலகட்டங்களில் காயமடைந்த பொழுது சிவம் துபே அவருடைய இடத்திற்கு இந்திய அணியில் கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் காட்டிய ஆக்ரோஷத்தை சர்வதேச கிரிக்கெட்டில் காட்ட முடியாமல் போனது. இதனால் அவரை அப்படியே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஓரம் கட்டியது.

இப்படியான நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அவரை 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் வாங்கியது. அந்த இடத்திலிருந்து சிவம் துபே ஆட்டம் மேம்பட ஆரம்பித்தது. அவர் ரன் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தினார். அவருடைய பலவீனமான ஷார்ட் பந்துகளை சிங்கிள் ரன் ஆடி விக்கெட்டை காப்பாற்றினார்.

- Advertisement -

இதன் மூலம் அவர் ஆட்டம் மேம்பட்டு அவருக்கு நல்ல தன்னம்பிக்கையும் உற்சாகமும் கிடைத்தது. இதனால் அவர் தனது பந்து வீச்சிலும் வேலை செய்ய ஆரம்பித்தார். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பேட்டிங் பந்துவீச்சு என்று மும்பை அணிக்கு சிறந்த பங்களிப்பை கொடுத்து வந்தார். மீண்டும் ஹர்திக் பாண்டியா காயம் அடைய இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டிகள் வாய்ப்பு பெற்ற அவர், இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக இரண்டு அரை சதங்களை அடித்திருக்கிறார். மேலும் 2 போட்டியிலும் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்திருக்கிறார். எப்படி விளையாட வேண்டும் என்பது மட்டுமில்லாமல், ஆட்டத்தை முடித்துக் கொடுப்பதிலும் மகேந்திர சிங் தோனி தனக்கு கற்றுக் கொடுத்திருப்பதாக கூறிய ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் ஜெய்ஸ்வாலை ஆட விட்டு வேடிக்கை பார்த்த சிவம் துபே, அடுத்து ஸ்பின்னர் முகமது நபிபத்தாவது ஓவருக்கு வர, அந்த ஓவரின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பந்துகளில் லாங் ஆன், கவ் கார்னர், மிட் ஆஃப் என மூன்று திசைகளில் மூன்று பந்துகளையும் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு அசத்தினார்.

நேற்றைய போட்டியில் 32 பந்துகளை மட்டும் சந்தித்து ஐந்து பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் என 62 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். தற்போது இவருடைய ஒட்டுமொத்த பார்ம் மிகச் சிறப்பாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது மட்டும் இல்லாமல் எல்லா இடத்திலும் மகேந்திர சிங் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கு இவர் நன்றி செலுத்துவதும் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது!

- Advertisement -