வீடியோ.. 2, 6, 2, 0, 4, 6 பிராவோ அதிரடியில் பரபரப்பான ஆட்டத்தில் போராடி தோற்றது சூப்பர் கிங்ஸ்!

0
2112
TSK

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடர் ஆறு அணிகளை வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 15 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட இருக்கிறது. டி20 கிரிக்கெட் வடிவம் உலகெங்கும் பல நாடுகளுக்கு கிரிக்கெட்டை கொண்டு சென்றிருக்கிறது. அதேபோல ஐபிஎல் தொடரின் வெற்றி பல நாடுகளை டி20 லீக்குகளை நடத்த வைத்திருக்கிறது. தற்பொழுது இந்தப் பட்டியலில் அமெரிக்காவும் சேர்ந்திருக்கிறது.

இந்த டி20 லீக் தொடரில் விளையாடும் மொத்தம் ஆறு அணிகளில் நான்கு அணிகளை ஐபிஎல் அணிகளை வாங்கி உள்ள சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியிருக்கிறார்கள். மீதம் இரண்டு அணிகளை அமெரிக்கா நிறுவனங்கள் வாங்கியிருக்கிறது.

- Advertisement -

இன்று இந்திய நேரப்படி காலை நடந்த ஒரு போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், வாஷிங்டன் பிரீடம் அணியும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வாஷிங்டன் கிரீடம் அணியின் கேப்டன் மோசஸ் ஹென்றிகுயூஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம் பெற்று இருந்த இங்கிலாந்தின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ காயத்தால் விளையாட முடியாமல் போக ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷார்ட் என்பவர் விளையாடியிருப்பார். அவர் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் துவக்க ஆட்டக்காரராகவும் இடம்பெற்று இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் அவர் மொத்தம் 50 பந்துகளை எதிர் கொண்டு பத்து பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் அபாரமாக விளையாடி 80 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்து அந்த அணியில் யாரும் பெரிதான எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை. இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் கோட்சி 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து விளையாட வந்த சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பாப் டூ ப்ளிசிஸ் மற்றும் கான்வே இருவரும் ஏமாற்றம் அளித்தார்கள். கடந்த ஆட்டத்தில் பாப் முதல் பந்தில் ஆட்டம் இழந்து இருக்க, இந்த முறை கான்வே முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவரும் முறையே 14, 0 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இதற்கடுத்து வந்த லகிரு மிலிந்த 15, டேவிட் மில்லர் 14, மிலிந்த் குமார் 3, மிட்சல் சான்ட்னர் 22, கால்வின் சாவேஜ் 7, ஜெரால்டு கோட்சி 1 ரன் என எடுத்து அடுத்தடுத்து வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.

ஆனால் இன்னொரு முனையில் நின்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மாறி இருக்கும் டுவைன் பிராவோ அதிரடியில் தன்னை மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் இறக்க வேண்டும் என்கின்ற அளவுக்கு ஆடிவிட்டார்.

பிராவோ மொத்தமாக 39 பந்துகளை சந்தித்து ஐந்து பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் கடைசி வரை நின்றார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை 10 ஆப்பிரிக்காவின் அதிவேக பந்துவீச்சாளர் அன்ட்ரிச் நோர்க்கியா வீசினார். அந்த ஓவரில் மொத்தமாக பிராவோ 20 ரன்கள் விளாசினார்.

பிராவோ அதிரடி ஆட்டத்தை சுவாரசியமாக மாற்றினாலும் சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கு கொண்டு செல்லும் அளவுக்கு இல்லை. இறுதியில் சூப்பர் கிங்ஸ் அணி போராடி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது ஆட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. அதே சமயத்தில் தமது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றும் இருக்கிறது.