வீடியோ.. ஒரே ஓவரில் 48 ரன்கள்.. அசத்திய ஆப்கானிஸ்தான் இளம் வீரர்.. ருதுராஜ் சாதனை சமன்!

0
1047
Afghanistan

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான காபுல் பிரிமியர் லீக் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய அணியின் வீரரான ருதுராஜின் உள்நாட்டு கிரிக்கெட் சாதனை ஒன்று சமன் செய்யப்பட்டு இருக்கிறது.

காபுல் பிரீமியர் லீக் தொடரின் பத்தாவது போட்டியில் ஷகீன் ஹண்டர்ஸ் அணியும் அபாஸின் டிபென்டர்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஷகீன் ஹண்டர்ஸ் அணி பேட்டிங் செய்தது.

- Advertisement -

இந்த அணியின் கேப்டன் 21 வயதான இடதுகை பேட்ஸ்மேன் செதிகுல்லா அடல், பேட்டிங்கில் ருத்ராஜ் விஜய் ஆசாரி தொடரில் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்து படைத்திருந்த சாதனையை தற்பொழுது சமன் செய்து இருக்கிறார்.

ஆட்டத்தின் 19 ஆவது ஓவரை இடது கை சுழற் பந்துவீச்சாளர் ஓமர் ஜசாய் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்து நோ-பால் ஆக விழ, அந்தப் பந்து சிக்ஸருக்கு பறந்தது. அடுத்த பந்தை கொஞ்சம் வெளியில் வீச முயற்சி செய்ய, அந்தப் பந்து வைடாக அமைந்ததோடு பவுண்டரிக்கும் சென்று ஐந்து ரன்கள் வந்தது. ஓவரின் முதல் பந்தை வீசி முடிக்கும் முன்னமே 12 ரன்கள் வந்துவிட்டது.

இதற்குப் பிறகு அந்த ஓவரில் வீசப்பட்ட ஒவ்வொரு பந்தும் செதிக்குல்லா அடலால் எல்லைக்கோட்டை தாண்டி காற்றில் அனுப்பி வைக்கப்பட்டன. அடுத்தடுத்து வீசப்பட்ட ஆறு பந்துகளும் சிக்ஸர்களாக மாறின. இதன் மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 48 ரன்கள் வந்தது. இதனால் ருத்ராஜ் சாதனை சமன் செய்யப்பட்டது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் செதிக்குல்லா அடல் 56 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 118 ரன்கள் குவித்தார். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய எதிரணி 19 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஷகின் ஹண்டர்ஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் என்ற சமூக வலைதள பக்கத்தில் ” இந்த நூறு ரன்களுக்குப் பிறகு இந்த இளம் வீரருக்கு ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டும் மற்றும் லீக் கிரிக்கெட்டும் கதவுகள் திறக்க வேண்டும்!” என்று பதிவிடப்பட்டு இருந்தது.

தற்காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் ஒரு அணியாக கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி இருக்கிறது. இன்றளவில் டி20 கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரராக ஆப்கானிஸ்தானின் ரஷித் கான்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.