வீடியோ.. 19 பவுண்டரி.. 180 ரன்.. அடிச்சு நொறுக்கிய தீபக் ஹூடா.. இறுதிப் போட்டியில் ராஜஸ்தான்!

0
1604
Hooda

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

லீக் சுற்று, காலிறுதி எல்லாம் முடிந்து நேற்று அரையிறுதி போட்டிகள் ஆரம்பித்தது. முதல் அரைஇறுதிப் போட்டியில் தமிழ்நாடு ஹரியானா அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கர்நாடகா முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது.

கர்நாடக அணிக்கு முதல் ஐந்து பேட்ஸ்மேன்களிடம் இருந்து பெரிய ரன் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடும் அபினவ் மனோகர் ஆறாவது பேட்ஸ்மேனாக 80 பந்துகளில் 91 ரன்களும், ஏழாவது பேட்ஸ்மேனாக வந்த மனோஜ் பாண்டேஜ் 39 பந்துகளில் அதிரடியாக 69 ரன்களும் எடுத்தார்கள்.

இறுதியாக கர்நாடக அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. அங்கீத் சவுத்ரி மற்றும் அஜய் சிங் தலா இரண்டு விக்கெட்டுகள் ராஜஸ்தான் தரப்பில் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு முதல் மூன்று விக்கெட்டுகள் 23 ரன்களில் விழுந்துவிட்டது. இதற்கு அடுத்து கேப்டன் தீபக் ஹூடா மற்றும் கரண் லம்பா இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க ஆரம்பித்தார்கள்.

ஒரு முனையில் கரண் லம்பா பொறுமையாக விளையாட, இன்னொரு முனையில் கேப்டன் தீபக் ஹூடா அதிரடியில் கர்நாடக பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். இந்த ஜோடி படிப்படியாக ராஜஸ்தான் வெற்றியை மிக எளிதாக மாற்றியது.

மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் தீபக் ஹூடா 128 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 180 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 255 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவருடன் சேர்ந்து விளையாடிய கரண் லம்பா ஆட்டம் இழக்காமல் 112 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை 43.3 ஓவரில் உறுதி செய்தார்.

இந்த ஆண்டு விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டியில் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் முழுவதும் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தீபக் ஹூடா மிகவும் தடுமாறி வந்தார். தற்பொழுது அவருக்கு இந்த இன்னிங்ஸ் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்!